239


அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி அழிந்தஎன்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத் தொண்டர்க்கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு தீச்சுழலக்
கடற்கரி தாய்எழு நஞ்சமு தாக்கும் கறைக்கண்டனே.

பதப்பொருள் : விழு - மேலாகிய, தொண்டர்க்கு அல்லால் - அடியார்களுக்கு அல்லாது, தொடற்கு அரியாய் - ஏனையோர்க்குப் பற்றுதற்கு அருமையானவனே, சுடர் மாமணியே - ஒளி விளங்கும் பெரிய மாணிக்கமே, சுடுதீச் சுழல - சுடும் தீயாகிய வடவையும் நிலை கலங்க, கடற்கு - கடலின்கண், அரிதாய் எழும் - அருமையாய் உண்டாகிய, நஞ்சு - நஞ்சை, அமுது ஆக்கும் - அமுதாக்கிய, கறைக்கண்டனே - நீலகண்டப் பெருமானே, விடற்கு அரியாய் - விடுதற்கு அருமையானவனே, அடல் கரி போல் - வலி பொருந்திய யானையைப் போன்ற, ஐம்புலன்களுக்கு அஞ்சி - ஐம்புல ஆசைக்குப் பயந்து, அழிந்த என்னை - உள்ளமொடுங்கிய என்னை, விட்டிடுதி - விட்டுவிடுவாயோ!

விளக்கம் : பாற்கடலில் தோன்றிய விடம் ஊழித்தீயினும் கொடுமையுடையதாகலின், 'சுடுதீச் சுழல' என்றார். கடற்கு என்ற நான்கன் உருபை கடற்கண் என்று ஏழன் உருபாக்கிப் பொருள் உரைக்கப்பட்டது. பாற்கடலில் உண்டாகிய நஞ்சு தேவராலும் தாங்குதற்கரிய பெருவிடமாதலின், 'அரிதாய் எழு நஞ்சு' என்றார். யானையைப் போன்று வலிமையுடையன ஐம்புலன்களாதலின், 'அடற்கரி போல் ஐம்புலன்கள்' என்றார். நஞ்சத்தை அமுதாக்கி அமரரைக் காத்த இறைவன், ஐம்புல ஆசையை மாற்றித் தம்மையும் காக்க வேண்டும் என்பார், 'ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை விட்டிடுதி' என்றும் வேண்டுகிறார்.

இதனால், இறைவன் ஐம்புல ஆசையை நீக்கிய அடியவர்களாலேயே அடையத் தக்கவன் என்பது கூறப்பட்டது.

32

கண்டது செய்து கருணைமட் டுப்பரு கிக்களித்து
மிண்டுகின் றேனை விடுதிகண் டாய்நின் விரைமலர்த்தாள்
பண்டுதந் தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக்
கொண்டென்எந் தாய்களை யாய்களை யாய குதுகுதுப்பே.

பதப்பொருள் : எந்தாய் - என் தந்தையே, கருணைமட்டு - உன் கருணையாகிய தேனை, பருகிக் களித்து - பருகிக் களிப்படைந்து, கண்டது செய்து - மனம் போனவாறு செய்து, மிண்டுகின்றேனை - செருக்கித் திரிகின்ற என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! நின் - உனது, விரை - மணம் அமைந்த, மலர் -