தாமரை மலர் போன்ற, தாள் - திருவடியை, பண்டு - முன்னே, தந்தாற்போல் - கொடுத்தருளினாற்போல, பணித்து - கொடுத்தருளி, பணி செய - உன் திருத்தொண்டினைச் செய்ய, கூவித்து - அழைப்பித்து, என்னைக் கொண்டு - என்னை ஏற்றுக்கொண்டு, களை ஆய - வீடு பேற்றுக்கு இடையூறாய் உள்ள, குதுகுதுப்பு - களிப்பினை, களையாய் - களைவாயாக. விளக்கம் : இறைவன் திருவருள் கிடைத்துவிட்டமையால், களிப்புற்று நெறிகடந்து திரிகின்ற என்னை விடலாகாது என்பார். 'கருணை மட்டுப் பருகிக் களித்து மிண்டுகின்றேனை விடுதி' என்றார். 'புலைய னேனையும் பொருளென நினைந்துன் அருள் புரிந்தனை புரிதலும் களித்துத் தலையினால் நடந்தேன்' என்று, செத்திலாப் பத்தில் அருள் பெற்ற பின்னர்த் தாம் செருக்கிய நிலையைக் கூறுகிறார். ஆதலின், மீண்டும் திருவடி ஞானத்தை நல்கி ஆளாகக் கொண்டு களிப்பினை நீக்கி அருள்வாயாக என்பார், 'களையாய் களையாய குதுகுதுப்பே' என்றார். கூவுவித்து என்பது கூவித்து என வந்தது. களை - பயிரை வளரவிடாமல் தடுக்கும் புல் முதலியன. அவற்றைப் போலக் களிப்பு, ஞானத்தை வளரவிடாமல் தடுக்கும். பயிர் வளர்வதற்குக் களையைப் பிடுங்கி எறிவர்; அதைப் போல ஞானம் வளர்வதற்குக் களிப்பினை நீக்கி அருள வேண்டும் என்பதாம். இதனால், திருவருள் பெற்றமைபற்றிச் செருக்குற்று நெறி கடத்தலும் வீடு பேற்றுக்குத் தடையாம் என்பது கூறப்பட்டது. 33 குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில் விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை யார்ந்தினிய மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின் மனம்கனிவித் தெதிர்வதெப் போது பயில்விக் கயிலைப் பரம்பரனே. பதப்பொருள் : பயில்வி - நிறைந்த மலர்களையுடைய, கயிலைப் பரம்பரனே - கயிலையில் வாழ்கின்ற மிக மேலானவனே, குதுகுதுப்பு இன்றி நின்று - உன் திரவுளக் கருத்திற்கியைய நடப்பதில் மகிழ்ச்சியின்றி நின்று, என் குறிப்பே செய்து - என் குறிப்பின்படி செய்து, நின் குறிப்பில் - உன் குறிப்பினை அறிவதில், விதுவிதுப்பேனை - விரைகின்ற என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! வாழைப் பழத்தின் - வாழைப்பழத்தைப் போல, என்னை மனம் கனிவித்து - என்னை மனம் குழையப்பண்ணி, விரை ஆர்ந்து இனிய - மணம் நிறைந்து இனிதாய் இருக்கிற, மதுமதுப் போன்று - ஓர் இனிமையில் மற்றோர் இனிமை கலந்தது போன்று, எதிர்வது எப்போது - நீ எதிர்ப்படுவது எக்காலம்?
|