விளக்கம் : குதுகுதுப்பு - மகிழ்ச்சி. இறைவன் திருவுளக் குறிப்புக்கு ஏலாது தம் மனம் சென்றவாறே செய்தலைக் கூறுவார், 'குதுகுதுப்பின்றி நின்று என் குறிப்பே செய்து' என்றார். இவ்வாறு செய்கின்ற யான் உன் திருவருளுக்கு உரியவன் அல்லேன் என்பார், 'நின் குறிப்பில் விதுவிதுப்பேனை' என்றார். வாழைப்பழத்தைப் போன்று மனத்தைக் குழையவைத்து இறைவன் தேன் போன்று கலக்க வேண்டும் என்பார், 'வாழைப் பழத்தின் மனங்கனிவித்து மதுமதுப் போன்றென்னை எதிர்வது எப்போது' என்று வினவுகிறார். கனிந்த பழத்திலே தேன் கலந்தால் சுவை மிகவுடையதாம். வீ - மலர்; இது, 'வி' எனக் குறுகி நின்றது. இதனால், திருவருள்தேனைப் பருகுதற்குரிய பக்குவம் வேண்டும் என்பது கூறப்பட்டது. 34 பரம்பர னேநின் பழஅடி யாரொடும் என்படிறு விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின் அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ வாயரவம் பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே. பதப்பொருள் : மெல்முயற்கறையின் அரும்பு - மெல்லிய மதிக்கொழுந்தையும், அர - பாம்பையும், நேர்வைத்து அணிந்தாய் - சமமாக வைத்து அணிந்தவனே, பெருமான் - எம்பிரானே, வினையேன் - தீவினையுடைய நான், மனம் அஞ்சி - மனம் நடுங்கி, பொதும்பு உற - புகலிடம் அடையும்படி, பிறவி - பிறப்பாகிய, ஐவாய் அரவம் - ஐந்தலை நாகம், பொரும் - தாக்குகின்றது, பரம்பரனே - மிக மேலானவனே, நின் பழ அடியாரொடும் - உன் பழைய அடியார்களது உண்மைத் தொண்டோடும், என் படிறு - எனது வஞ்சத் தொண்டினையும், விரும்பு - ஏற்றுக்கொள்ளுகின்ற, அரனே - சங்காரக் கடவுளே, விட்டிடுதி - என்னை விட்டுவிடுவாயோ! விளக்கம் : முயற்கறை - முயல் போன்ற களங்கம். அது இங்கு அதனையுடைய சந்திரனை உணர்த்திற்று. அரா - பாம்பு. இது 'அர' எனக் குறுகிற்று. பட அரவும் இளமதியும் பகைப்பொருள். எனினும், அரவின் கொடுமையைப் போக்கி மதியுடன் ஒக்க அணிந்திருக்கிறான் இறைவன் என்பார், 'மென்முயற்கறையின் அரும்பர நேர்வைத் தணிந்தாய்' என்றார். பிறவியாகிய பாம்பு அடியேனை அஞ்சி வருந்தும்படி தாக்குகிறது என்பார். 'பிறவி ஐவாயரவம் மனம் அஞ்சிப் பொதும்புறவே பொரும்' என்றார். பாம்பின் விடத்தைப் போக்கி மதியினுக்கு அச்சந்தவிர்த்து ஆண்டது போல, பிறவியின் கொடுமையைப் போக்கி அடியேனது அச்சத்தையும் தவிர்த்து ஆட்கொள்ள
|