வேண்டும் என்பது குறிப்பு. பழவடியார் என்பது, அவரது தொண்டினைக் குறித்த ஆகுபெயர். இதனால், பிறவியின் கொடுமையைப் போக்கி அருள வல்லவன் இறைவன் என்பது கூறப்பட்டது. 35 பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன் தீக்கதுவ வெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை யார்நறவம் ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண் டதும்பும் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே. பதப்பொருள் : விரை ஆர் - மணம் நிறைந்த, நறவம் ததும்பும் - தேன் ததும்புகின்ற, மந்தாரத்தில் - மந்தார மலரில், தாரம் பயின்று - தாரமாகிய வல்லிசையைப் பழகி, மந்தம் முரல் - பின் மந்தமாகிய மெல்லிசையை ஒலிக்கின்ற, வண்டு - வண்டுகள், அதும்பும் - அழுந்தித் திளைக்கின்ற, கொழுந்தேன் - செழுமையாகிய தேனோடு கூடி, அவிர் - விளங்குகின்ற, சடை - சடையினையுடைய, வானத்து - பரமாகாயத்திலுள்ள, அடல் அரைசே - வலிமை மிக்க அரசனே, பொதும்பு உறு - மரப்பொந்தினை அடைந்த, தீப்போல் - நெருப்புப் போல, புகைந்து எரி - புகைந்து எரிகின்ற, அப்புலன் தீக்கதுவ - அந்தப் புலன்களாகிய நெருப்புப் பற்றுதலால், வெதும்புறுவேனை - வெப்பமுறுகின்ற என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ? விளக்கம் : மந்தாரம் என்பது கற்பக முதலிய தேவதருக்கள் ஐந்தனுள் ஒன்று. 'தாரம்' என்பது ஏழிசைகளுள் ஒன்று; அஃது உச்சச் சுரமாகும். மரப்பொந்தில் பொருந்திய தீ, சிறிது சிறிதாகப் பரவி மரத்தை எரித்தல் போல, பொறிகளில் பொருந்திய புலனாகிய தீ, சிறிது சிறிதாகப் பரவி உடம்போடு உயிரையும் சுடுகின்றது என்பார், 'பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப் புலன் தீக்கதுவ வெதும்புறுவேனை' என்றார். இதனால், ஐம்புல ஆசை நெருப்புப் போன்ற உயிரை வாட்டும் என்பது கூறப்பட்டது. 36 அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னின் அல்லால் விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண் ணகைக்கருங்கண் திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந் தடர்வனவே. பதப்பொருள் : வெள்நகை - வெண்மையான பல்லினையும், கருங்கண் - கருமையான கண்ணையும் உடைய, திரை சேர் மடந்தை - திருப்பாற்கடலில் தோன்றிய திருமகள், மணந்த - வணங்கிப் பொருந்திய, திருப்பொற்பதம் - அழகிய திருப்பாதங்களை உடைய, புயங்கா - பாம்பணிந்த பெருமானே,
|