இன்பத்தில் அகப்பட்டு உழல்கின்ற என்னை விடலாகாது என்பார், 'அஞ்சொல் நல்லார் அவர்தம் விடர் விடலேனை விடுதி கண்டாய்' என்றார். இதனால், மாதர் இன்பத்தைக் கடப்பது மிகவும் அருமை என்பது கூறப்பட்டது. 38 தனித்துணை நீநிற்க யான்தருக் கித்தலை யால்நடந்த வினைத்துணை யேனை விடுதிகண் டாய்வினை யேனுடைய மனத்துணை யேஎன்றன் வாழ்முத லேஎனக் கெய்ப்பில்வைப்பே தினைத்துணை யேனும் பொறேன்துய ராக்கையின் திண்வலையே. பதப்பொருள் : வினையேனுடைய - வினையேனது, மனத்துணையே - மனத்துக்குத் துணையே, என்றன் வாழ்முதலே - என்னுடைய வாழ்வுக்குக் காரணமானவனே, எனக்கு எய்ப்பில் வைப்பே - எனக்கு இளைத்த காலத்தில் நிதியாய் இருப்பவனே, துயர் - துன்பங்களுக்கு ஆதாரமாகிய, ஆக்கையின் திண்வலை - உடம்பென்னும் திண்ணிய வலையிற்கிடப்பதை, தினைத்துணையேனும் பொறேன் - தினை அளவு நேரங்கூடப் பொறுக்க மாட்டேன், தனித்துணை நீ நிற்க - ஒப்பற்ற துணையாகிய நீ இருக்க, யான் - நான், தருக்கி - செருக்கடைந்து, தலையால் நடந்த - தலையாலே நடந்த, வினைத்துணையேனை - வினையைத் துணையாகவுடைய என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : துன்பங்கள் தங்குதற்குரிய இடமாதலின் உடம்பைத், 'துயராக்கை' என்றார். 'இலக்கம் உடம்பிடும்பைக்கு' என்றார் திருவள்ளுவரும். வலையிற்சிக்கிய விலங்கு வலைஞனே விடுவித்தாலன்றி விடுபட முடியாது. அது போல, உடம்பிற்சிக்கிய உயிர் இறைவனே அருளினாலன்றி வீடு பேறு அடைய முடியாது. ஆதலின், யாக்கையை வலை என்றார். 'கட்டிய நீயே அவிழ்க்கினல்லது - எத்தளையாயினும் யான் அவிழ்க்கறியேன்' என்ற பட்டினத்தடிகள் வாக்கையுங்காண்க. செருக்கு - இறைவன் அடியான் என்னும் செருக்கு. தலையால் நடத்தல் - விபரீதமாய் ஒழுகுதல். இதனால், இறைவன் அருள் பெற்ற பின்னரும் நன்னெறியின் நீக்குதல் கூடாது என்பது கூறப்பட்டது. 39 வலைத்தலை மான்அன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு மிலைத்தலைந் தேனைவிடுதிகண் டாய்வெண் மதியின்ஒற்றைக் கலைத்தலை யாய்கரு ணாகர னேகயி லாயமென்னும் மலைத்தலை வாமலை யாள்மண வாளஎன் வாழ்முதலே.
|