பதப்பொருள் : வெண்மதியின் - வெள்ளிய சந்திரனது, ஒற்றைக் கலை - ஒரு கலையை, தலையாய் - தலையில் அணிந்தவனே, கருணாகரனே - கருணைக்கு இருப்பிடமானவனே, கயிலாயம் என்னும் - கயிலாயம் என்கிற, மலைத் தலைவா - மலைக்குத் தலைவனே, மலையாள் மணவாள - மலைமகளாகிய உமாதேவிக்கு மணாளனே, என் வாழ்முதலே - என் வாழ்வுக்கு மூலமே, வலைத்தலை - வலையினிடத்து அகப்பட்ட, மான் அன்ன - மான் போன்ற, நோக்கியர் - கண்களையுடைய மாதராரது, நோக்கின் - பார்வையாகிய, வலையிற்பட்டு - வலையிற்சிக்கி, மிலைத்து அலைந்தேனை - மயங்கி அலைந்த என்னை; விடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : பிறையைச் சூடியிருத்தல் இறைவனது கருணையைக் காட்டுமாதலின், 'ஒற்றைக்கலைத் தலையாய்' என விளித்தார். வலையில் அகப்பட்ட மான் மிகவும் மருண்டு பார்க்கும்; அது போல, மாதரும் மருண்ட பார்வையுடையராதலின், 'வலைத்தலை மான் அன்ன நோக்கியர்' என்றார். அத்தகைய பார்வையினின்றும் மீளுதல் அருமையாதலின், 'நோக்கின் வலை' என்றார். இதனால், மாதரது பார்வையாகிய வலையில் சிக்கியவர் வெளி வருதல் அருமை என்பது கூறப்பட்டது. 40 முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற் கடிப்பமூழ்கி விதலைச்செய் வேனை விடுதிகண் டாய்விடக் கூன்மிடைந்த சிதலைச்செய் காயம் பொறேன்சிவ னேமுறை யோமுறையோ திதலைச்செய் பூண்முலை மங்கைபங் காஎன் சிவகதியே. பதப்பொருள் : திதலைச் செய் - தேமல் படர்ந்த, பூண்முலை - அணி பூண்ட கொங்கைகளையுடைய, மங்கை பங்கா - உமைபாகனே, என் சிவகதியே - என் இன்ப நெறியே, சிவனே - சிவபெருமானே, முதலைச் செவ்வாய்ச்சியர் - முதலை போன்ற கொடுமையையுடைய சிவந்த வாயைக் கொண்டுள்ள மாதராரது, வேட்கை வெந்நீரில் - ஆசையாகிய வெப்பம் மிகுந்த நீரில், கடிப்ப மூழ்கி - ஆழ முழுகி, விதலைச் செய்வேனை - நடுக்கம் உறுகின்ற என்னை, விடுதி - விட்டு விடுவாயோ! விடக்கு ஊன்மிடைந்த - புலால் நாற்றமுடைய தசை நிறைந்த, சிதலைச் செய்காயம் - நோய்க்கு இடமாகிய உடம்பை, பொறேன் - தாங்க மாட்டேன், முறையோ முறையோ - இந்நிலை தகுமோ தகுமோ? விளக்கம் : "அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும் வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் - வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலுங் காமம் அவற்றினு மஞ்சப் படும்" (நாலடியார்)
|