என்றபடி, காமம் மனத்தைக் கவற்றிச் சுடுவது ஆதலின், 'வேட்கை வெந்நீர்' என்றார். முதலையைப் போன்ற கொடுமையுடையவராதலின், மாதரை 'முதலைச் செவ்வாய்ச்சியர்' என்றார். மாதரார் வயப்பட்டோர் மீள முடியாது என்பதாம். வீடுபேறு விரும்புவார் துன்பம் தரும் காயத்தில் வாழ விரும்பாராதலின், 'சிதலைச் செய் காயம் பொறேன்' என்றார். 'வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்' என்று முன்னரும் கூறினார். அக்காயம் சுமையாகவும் அடிகட்கு இருந்தமையின், 'பொறேன்' என்றார். 'பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை' என்ற நாயனார் வாக்கை ஒப்பு நோக்குக. இதனால், வீடுபேறு விரும்புவார்க்கு உடம்பும் சுமையாம் என்பது கூறப்பட்டது. 41 கதிஅடி யேற்குன் கழல்தந் தருளவும் ஊன்கழியா விதிஅடி யேனை விடுதிகண் டாய்வெண் டலைமுழையிற் பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்கஅஞ்சி மதிநெடு நீரிற் குளித்தொளிக் கும்சடை மன்னவனே. பதப்பொருள் : வெள் தலை முழையில் - வெண்மையான தலையாகிய வளையை, பதி உடை - இருப்பிடமாக உடைய, வாள் அர - ஒளியையுடைய பாம்பானது, பார்த்து - நோக்கி, இறைபைத்துச் சுருங்க - சற்றுப் படமெடுத்து அதனைச் சுருக்கிக்கொள்ளவும், மதி - பிறைச்சந்திரன், அஞ்சி - அதனைக் கண்டு பயந்து, நெடுநீரிற் குளித்து - கங்கையாகிய பெரிய நீர் நிலையில் மூழ்கி, ஒளிக்கும் - மறைந்துகொள்ளும், சடை மன்னனே - சடையையுடைய தலைவனே, அடியேற்குக் கதி - அடியேனுக்கு உயர் ஞானநெறியை, உன் கழல் தந்தருளவும் - உன் திருவடிகள் கொடுத்தருளவும், ஊன் கழியா - உடல் நீங்கப்பெறா, விதி அடியேனை - ஊழ்வினையுடைய அடியேனை, விடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : 'முழையில்' என்பது வேற்றுமை மயக்கம். படம் எடுத்தல் பாம்புக்கு இயல்பு. சுருங்குதல் இறைவற்கு அஞ்சி என்பதாம். சந்திரன் பாம்பைக் கண்டு அஞ்சுதல் இயல்பாதலால், 'அஞ்சி மதி நெடுநீரிற் குளித்தொளிக்கும்' என்றார். திருவடி ஞானம் பெற்ற பின்னரும் ஊழ்வினை (பிராரத்தவினை) அனுபவித்தே தீர வேண்டுமாதலின், 'உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா விதி' என்றார். இதனால், வினை நீங்கிய வழியல்லது உடம்பு நீங்காது என்பது கூறப்பட்டது. 42
|