247


மன்னவ னேஒன்று மாறறி யாச்சிறி யேன்மகிழ்ச்சி
மின்னவ னேவிட் டிடுதிகண் டாய்மிக்க வேதமெய்ந்நூல்
சொன்னவ னேசொற் கழிந்தவ னேகழி யாத்தொழும்பர்
முன்னவ னேபின்னு மானவ னேஇம் முழுதையுமே.

பதப்பொருள் : மிக்க வேதம் - மேலான வேதமாகிய, மெய்ந்நூல் சொன்னவனே - உண்மை நூலினைச் சொன்னவனே, சொல் கழிந்தவனே - சொல்லினுக்கு அப்பாற்பட்டவனே, சொல் கழிந்தவனே - சொல்லினுக்கு அப்பாற்பட்டவனே, கழியாத் தொழும்பர் - நீங்காத அடியார்க்கு, முன்னவனே - முன் நிற்பவனே, பின்னும் - அவர்க்கு ஆதரவாகப் பின் நிற்பவனும், இம்முழுதையும் ஆனவனே - இவ்வெல்லாமும் ஆனவனே, மன்னவனே - தலைவனே, ஒன்றும் ஆறு - உன்னை வந்து கலக்கும் விதத்தை, அறியா - அறியாத, சிறியேன் - சிறியேனுக்கு, மகிழ்ச்சி மின்னவனே - இன்ப விளக்கமாய்த் திகழ்பவனே, விட்டிடுதி - விட்டுவிடுவாயோ!

விளக்கம் : அடியார்கள் இறைவன் தமக்கு நன்மையைச் செய்யினும், செய்யாதொழியினும் அவனை விட்டு நீங்காராதலின், 'கழியாத் தொழும்பர்' என்றார். 'பெற்ற போதும் பெறாத போதும் பேணி உம் கழல் ஏத்துவார்கள்' என்ற சுந்தரர் தேவாரத்தைக் காண்க. இறைவன் இத்தகைய அடியாரது செயலுக்கெல்லாம் முன்னிற்பதோடு பின் நின்றும் அவரைத் தாங்குவான் என்பார், 'தொழும்பர் முன்னவனே, பின்னுமானவனே' என்றார். 'தன் கடன் அடியேனையும் தாங்குதல்' என்ற திருநாவுக்கரசர் வாக்கையும் காண்க. 'முழுதையும்' என்பதில் ஐகாரம் சாரியை.

சீவன் முத்தி நிலை எய்திய அடிகள் இவ்வுடம்பைவிட்டு இறைவனோடு கலத்தலுக்கு விழைகின்றார் என்பது, 'ஒன்றுமாறறியாச் சிறியேன்' என்பதனால் விளங்குகிறது. சீவன் முத்தி நிலையில் உள்ள அடியவர்களுக்கு இறைவன் தனது பேரின்பத்தினை இவ்வுலகிலேயே வழங்கி நிற்கின்றான் ஆதலின், 'சிறியேன் மகிழ்ச்சி மின்னவனே' என்றார்.

அதனால், சீவன் முத்தி நிலையை அடைந்த பின்பும் உடல் நீக்கம் பெற்று சிவப்பேறு அடைதற்கு இறைவனே அருள வேண்டும் என்பது கூறப்பட்டது.

43

முழுதயில் வேற்கண் ணியரென்னும் மூரித் தழல்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண் டாய்நின் வெறிமலர்த்தாள்
தொழுதுசெல் வானத் தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
பழுதுசெய் வேனை விடேலுடை யாய்உன்னைப் பாடுவனே.

பதப்பொருள் : எம்பிரான் - எம்பெருமானே, உடையாய் - உடையவனே, முழுது அயில்வேல் - முழுக்கூர்மையை உடைய வேற்படை போன்ற, கண்ணியர் என்னும் - கண்களையுடைய