மாதரார் என்கிற, மூரித்தழல் முழுகும் - பெருநெருப்பில் முழுகுகின்ற, விழுது அனையேனை - வெண்ணெய் போன்ற என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! உன்னைப் பாடுவன் - உன்னை நான் புகழ்ந்து பாடுவேன், நின் - உனது, வெறி - மணம் பொருந்திய, மலர் - தாமரை மலர் போன்ற, தாள் - திருவடியை, தொழுது செல் - வணங்கிச் செல்லுகின்ற, வானத் தொழும்பரில் கூட்டிடு - பரவெளித் தொண்டரோடு சேர்ப்பாயாக, பழுது செய்வேனை - குற்றம் செய்யும் என்னை, விடேல் - கைவிடாதே, சோத்து - வணக்கம். விளக்கம் : வேல் போன்ற கூர்மையுடைமையின் கண்ணை, 'அயில் வேற்கண்' என்றார். மகளிரைக் காணின் ஆடவர் மனம் உருகுதல் பற்றி, மகளிரைத் தழலாக்கியும் தம்மை வெண்ணெயாக்கியும் கூறினார். வீடு பேறு அடைவதற்கு அடியார் கூட்டம் சாதனமாதலின், 'தொழும்பரிற் கூட்டிடு' என்றார். 'அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்' என்று பின்னரும் வேண்டுவார். 'ஏதேனும் அறியா வெறுந்துரும் பனேனாயினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய்' என்ற தாயுமானவர் பாடலையுங்காண்க. சோத்தம் என்பது, இழிந்தார் உயர்ந்தார்க்குச் செய்யும் வணக்கம். அது சோத்து எனக் கடைக்குறைந்து நின்றது. இதனால், அடியார் கூட்டம் சிவப்பேறு அடைதற்குச் சாதனம் என்பது கூறப்பட்டது. 44 பாடிற்றி லேன்பணி யேன்மணி நீஒளித் தாய்க்குப்பச்சூன் வீடிற்றி லேனை விடுதிகண் டாய்வியந் தாங்கலறித் தேடிற்றி லேன்சிவ னெவ்விடத் தான்எவர் கண்டனரென் றோடிற்றி லேன்கிடந் துள்ளுரு கேன்நின் றுழைத்தனனே. பதப்பொருள் : மணி - மாணிக்கமே, பாடிற்றிலேன் - நின் புகழைப் பாட மாட்டேன், பணியேன் - நின்னை வணங்கேன், நீ ஒளித்தாய்க்கு - எனக்கு ஒளித்துக்கொண்ட உன்பொருட்டு, பச்சூன் வீடிற்றிலேனை - பசிய ஊனுடம்பைத் தொலைத்திடாத என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! வியந்து - வியப்படைந்து, ஆங்கு - அவ்விடத்தே, அலறித் தேடிற்றிலேன் - அலறித் தேடமாட்டேன், சிவன் - சிவபெருமான், எவ்விடத்தான் - எவ்விடத்திலுள்ளான், எவர் கண்டனர் - யார் அவனைக் கண்டனர், என்று - என்று கேட்டு, ஓடிற்றிலேன் - நாடி ஓடமாட்டேன், கிடந்து உள் உருகேன் - மனம் கசிந்து அன்பு செய்யேன், நின்று உழைத்தனன் - வீணே நின்று வருந்தினேன். விளக்கம் : திருப்பெருந்துறையில் ஞானாசிரியனாக எழுந்தருளிப் பின்னர் மறைந்தமையைக் குறிப்பிடுவார், 'நீ ஒளித்தாய்க்கு' என்றார். அப்பிரிவாற்றாமையைப் பொறுக்க
|