இதனால், நல்லோர் இறைவனிடமே அன்பு செலுத்துவர் என்பது கூறப்பட்டது. 2 முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன்ஆ னந்தன் அமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். பதப்பொருள் : முத்து அன்ன வெள் நகையாய் - முத்தைப் போன்ற வெண்மையான பற்களையுடையவளே, நாள்தோறும், முன் எழுந்து எதிர் வந்து - எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து, என் அத்தன் - என் தந்தை, ஆனந்தன் - இன்ப வடிவினன், அமுதன் - அமுதம் போன்றவன், என்று - என்று வாழ்த்தி, அள்ளூறி - வாய் மிகுதியும் ஊறி, தித்திக்கப் பேசுவாய் - இனிமை பயக்கும்படி பேசுவாய், வந்து உன் கடை திறவாய் - எழுந்து வந்து உன் வாயிற்கதவைத் திறவாய், (என்று எழுப்பியவர் கூற, எழுப்பப்பட்டவள் கூறுவாள்) பத்துடையீர் - நீங்கள் இறைவனிடத்தில் பேரன்புடையீர், ஈசன் பழஅடியீர் - இறைவனது பழமையான அடிமையுடையீர், பாங்குடையீர் - ஒழுங்குடையீர், புத்தடியோம் - புதிய அடியவராகிய எங்களது, புன்மை தீர்த்து - சிறுமையை ஒழித்து, ஆட்கொண்டால் - அடிமை கொண்டால், பொல்லாதோ - தீமையாய் முடியுமோ? (என்று எழுப்பப்பட்டவள் கூற, எழுப்பியவர் கூறுவர்) நின் அன்புடைமை - உன் அன்புடைமை, எத்தோ - வஞ்சனையோ, எல்லோம் அறியோமோ - உன் அன்பு உண்மை என்பதை நாங்கள் எல்லாம் அறிய மாட்டோமோ? சித்தம் அழகியார் - மனம் செம்மையுடையவர், நம் சிவனைப் பாடாரோ - நமது சிவபெருமானைப் பாட மாட்டார்களா? எமக்கு இத்தனையும் வேண்டும் - உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவே வேண்டும். விளக்கம் : இப்பாட்டும் உரையாடலாய் அமைந்துள்ளது. இனிய புன்முறுவலை உடையவள் என்பதைக் குறிக்க, ‘முத்தன்ன வெண்ணகையாய்’ என்று அழைத்தனர். இறைவனது திருநாமத்தை இடைவிடாது ஓதினால் மிகவும் இனிக்கும் ஆதலின், ‘அத்தன் ஆனந்தன் அமுததென்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய்’ என்றனர். இஃது அனுபவம். பற்று, பத்து என எதுகை நோக்கி நின்றது. ‘பழ அடியீர்’ என்றது, பல நாளும் இறைவனைப் பாடி வருகின்றவர்களைப் ‘புத்தடியோம்’ என்றது, அங்ஙனம் பாடி வருகின்றவர் களைக் கண்டு அவர்களோடு தாங்களும் சேர விரும்புகின்றவர்களை.
|