கிடத்தலாம். சின்னம் - எக்காளம். ‘வெவ்வேறாய்’ என்றது சொல்லும் முறை வெவ்வேறாய் என்றபடி. இதனால், இறைவனிடத்தில் பேரன்புடையவர்களையும் உறக்கம் தன் வசப்படுத்திவிடும் என்பது கூறப்பட்டது. 7 கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். பதப்பொருள் : கோழி சிலம்ப - கோழி கூவ, எங்கும் குருகு சிலம்பும் - எவ்விடத்தும் மற்றைய பறவைகள் ஓசையை எழுப்பும்; ஏழில் இயம்ப - வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எங்கும் வெண்சங்கு இயம்பும் - எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; கேழ்இல் பரஞ்சோதி - ஒப்பற்ற மேலான ஒளிப்பிழம்பானவனும், கேழ்இல் பரங்கருணை - ஒப்பற்ற மேலான கருணையுடையவனுமான சிவபெருமானது, கேழ் இல் விழுப் பொருள்கள் - நிகரில்லாத உயர்ந்த புகழ்களை, பாடினோம் - நாங்கள் பாடினோம்; கேட்டிலையோ - அவற்றை நீர் கேட்கவில்லையா? வாழி - வாழ்வாயாக; ஈது என்ன உறக்கமோ - இது எத்தகைமையான தூக்கமோ! ஆழியான் - பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால், அன்புடைமை ஆமாறும் - இறைவனிடத்தில் அன்புடையனான திறமும், இவ்வாறோ - இப்படித்தனோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை - பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய, ஏழை பங்காளனையே - உமை பாகனையே, பாடு - பாடுவாயாக. விளக்கம் : கோழி கூவுதலும், பறவைகள் ஒலித்தலும், இசைக்கருவிகள் இசைத்தலும், வெண்சங்கு முழங்குதலும் பொழுது புலர்வதை அறிவிப்பன. ஆனால், முன்னையவை கோயிலின் புறத்தேயும் பின்னையவை கோயிலின் உள்ளேயும் நிகழ்வன. இனி, வெளியே நிகழ்வது இயற்கைக் காட்சி; உள்ளே நிகழ்வது செயற்கைக் காட்சியாதலின், ‘கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்’ என்றும், ‘ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்’ என்றும் பிரித்துக் கூறினார். இறைவனது புகழ், பொருள் சேர் புகழாதலால், ‘விழுப்பொருள்கள்’ என்றதற்குப் புகழ்களை எனப் பொருள்
|