கொள்ளப்பட்டது. வாழி - இகழ்ச்சிக் குறிப்பு. ‘திருமாலும் பாற்கடலில் உறங்கித்தான் சிவபெருமானிடம் அன்பு கொண்டானோ!’ என நகைமொழியாகக் கூறுதற்கு, ‘ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?’ என்றனர். இதனால், உறக்கம் இறைவனிடத்தில் அன்பு செய்வதற்குத் தடையாகும் என்பது கூறுப்பட்டது. 8 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே என்கணவ ராவார் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையு மிலோமேலோர் எம்பாவாய். பதப்பொருள் : முன்னைப் பழம்பொருட்கும் - முற்பட்டனவாகிய பழமையான பொருள்களுக்கும், முன்னைப் பழம்பொருளே - முற்பட்ட பழமையான பொருளே, பின்னைப் புதுமைக்கும் - பிற்பட்டவனவாகிய புதிய பொருள்களுக்கும், பேர்த்தும் அப் பெற்றியனே - மீண்டும் புதிய பொருளாகின்ற அத்தன்மையனே, உன்னைப் பிரானாகப் பெற்ற - உன்னை ஆண்டவனாகப் பெற்ற, உன் சீர் அடியோம் - உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள், உன் அடியார் தாள் பணிவோம் - உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம் - அங்கு அவர்களுக்கே உரிமை உடையவராவோம்; அன்னவரே எம் கணவர் ஆவார் - அவர்களே எங்கள் கணவராவார்கள்; அவர் உகந்து சொன்ன பரிசே - அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, தொழும்பு ஆய்ப் பணி செய்வோம் - அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கோன் - எங்கள் பெருமானே, எமக்கு - எங்களுக்கு, இன்ன வகையே நல்குதியேல் - இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின், என்ன குறையும் இலோம் - எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாயிருப்போம். விளக்கம் : ‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருள்’ என்பதும், ‘பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியன்’ என்பதும், ‘இறைவன் காலதத்துவத்தைக் கடந்தவன்’ என்பதைக் குறிக்கும். பாங்காதலாவது, பக்கத்தில் இருந்து பணி புரிதல். இறைவனுக்கு அடியார்களாய் இருப்பவர்களையே கணவராக அடைய வேண்டுமென்று கன்னிப்பெண்கள் வேண்டுகின்றார்களாதலின், ‘அன்னவரே எங்கணவராவார்’ என்றும்,
|