‘தொண்டருளன்’ என்றும், ஓரூரன் அல்லன் ஆதலின், ‘ஏதவனூர்’ என்றும், ஒரு பெயர் உடையன் அல்லன் ஆதலின், ‘ஏதவன் பேர்’ என்றும், வேண்டுதல் வேண்டாமையிலான் ஆதலின், ‘ஆருற்றார் ஆர் அயலார்’ என்றும், இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்று கூற முடியாது ஆதலின், ‘ஏதவனைப் பாடும் பரிசு’, என்றும் வினவுவார் போன்று இறைவன் பெருமையைப் பாடினர். கோயிலில் பணி செய்யும் பெண்களைப் பிணாப்பிள்ளைகள் என்பர். இப்பாடல் நீராட்டுக்குச் செல்லும் பெண்டிர் கோயில் பணிப்பெண்களை வினவியதாகக் கூறியபடியாம். இதனால், இறைவனது பெருமையை அளவிட்டுரைத்தல் இயலாது என்பது கூறப்பட்டது. 10 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல் செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய். பதப்பொருள் : ஆர் அழல் போல் - நிறைந்த நெருப்புப் போன்ற, செய்யா - செந்நிறமுடையவனே, வெள் நீறு ஆடி - வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே, செல்வா - ஈசனே, சிறுமருங்குல் - சிற்றிடையையும், மை ஆர் தடம் கண் - மை பொருந்திய பெரிய கண்களையும் உடைய, மடந்தை மணவாளா - உமையம்மை கணவனே, ஐயா - அழகனே, மொய் ஆர் - வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய, தடம் பொய்கை - அகன்ற தடாகத்தில், முகேர் என்ன - ‘முகேர்’ என்ற ஒலி எழும்படி, புக்கு - புகுந்து, கையால் குடைந்து குடைந்து - கையினால் நீரை இறைத்து இறைத்து மூழ்கி, உன் கழல் பாடி - உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, வழி அடியோம் - பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம் - வாழ்ந்தோம்! ஐயா - தலைவனே, நீ ஆட்கொண்டருளும் - நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற, விளையாட்டின் - திருவிளையாட்டினால், உய்வார்கள் - துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள், உய்யும் வகை எல்லாம் - அவற்றைப் பெறும் வகைகளில் எல்லாம், உய்ந்தொழிந்தோம் - யாங்களும் படி முறையில் பெற்றுவிட்டோம். இனி, எய்யாமல் - நாங்கள் பிறவியில் இளைக்காதபடி, எம்மைக் காப்பாய் - எங்களைக் காத்தருள்வாயாக. விளக்கம் : ‘மடந்தை மணவாளா’ என்பது, இறைவன் போக வடிவினனாய் இருத்தலைக் குறிக்கும். ‘மொய்’ என்பது முதல் நிலைத் தொழிற்பெயர், ‘முகேர்’ என்பது, நீராடும் போது
|