‘ஆர்த்த பிறவி’ என்றும், இறைவன் அருளாகிய நீரைத் தன்னிடத்தே கொண்டுள்ளமையால், ‘தீர்த்தன்’ என்றும், சங்காரக் கடவுளாதலின், ‘தீயாடும் கூத்தன்’ என்றும் கூறினர். இறைவனை நோக்க வானுலகமும் பருப்பொருளேயாதலின், ‘இவ்வானும்’ என்ற அண்மைச் சுட்டுக் கொடுக்கப்பட்டது. இறைவன் படைத்தல் முதலிய தொழில்களைப் புரிந்த போதிலும் அவற்றால் விகாரப்பட்டான் என்பது, ‘விளையாடி’ என்றதனால் குறிக்கப்பட்டது. பொய்கை, சோலையிலுள்ள நீர்நிலை. சுனை, மலையிலுள்ள நீர்நிலை. பெண்டிர் பொய்கைகளிலும் சுனைகளிலும் நீராடினர் என்க. அனைவரும் நீராடுதலை ஒருவரை ஒருவர் முன்னிலைப் படுத்தி ‘ஆடு’ எனக் கூறினர். கன்னிப்பெண்கள் இறைவன் புகழைப் பாடி நீராடியபடியாம். இதனால், இறைவனது படைத்தல் முதலிய அருட்டொழில்களின் பயன் கூறப்பட்டது. 12 பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவுவார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். பதப்பொருள் : பைங்குவளை - பசுமையான குவளையின், கார் மலரால் - கருமையான மலர்களை உடைமையாலும், செங்கமலப் பைம்போதால் - செந்தாமரையினது குளிர்ந்த மலர்களை உடைமையாலும், அங்கும் குருகு இனத்தால் - கையில் வளையற்கூட்டத்தை உடைமையாலும் (அம்கம் - அழகிய நீர்ப்பறவைகளையுடைமையாலும்) பின்னும் அரவத்தால் - பின்னிக் கிடக்கின்ற பாம்பணிகளாலும் (மேலும் எழுகின்ற ஒலியுடைமை யாலும்) தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் - தங்களுடைய மும்மலங்களை நீக்கிக்கொள்ளக் கருதுவோர் வந்து அடைதலினாலும் (தம் உடம்பிலுள்ள அழுக்கைக் கழுவுதற்பொருட்டு மூழ்குவார் வந்து அணைவதாலும்), எங்கள் பிராட்டியும் - எம்பெருமாட்டியையும், எம் கோனும் போன்று - எங்கள் பெருமானையும் போன்று, இசைந்த - பொருந்தியுள்ள, பொங்கு மடுவில் - நீர் பொங்குகின்ற மடுவையுடைய பொய்கையில், புகப் பாய்ந்து பாய்ந்து - புகும்படி வீழ்ந்து மூழ்கி, நம் சங்கம் சிலம்ப - நம் சங்கு வளையல்கள்
|