தோறும், எழுந்தருளி - எழுந்தருளி வந்து, செங்கமலம் - செந்தாமரை போன்ற, பொன்பாதம் - அழகிய திருவடியை, தந்தருளும் - கொடுத்தருள்கின்ற, சேவகனை - வீரனை, அங்கண் அரசை - அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடியோங்கட்கு ஆர் அமுதை - அடிமைகளாகிய நமக்கு அமுதம் போல்வானை, நங்கள் பெருமானை - நம் தலைவனை, பாடி - புகழ்ந்து பாடி, நலம் திகழ - நன்மைகள் பெருக, பங்கயப் பூம் புனல் - தாமரை மலர் நிறைந்த நீரில், பாய்ந்து ஆடு - குதித்து ஆடுவாயாக. விளக்கம் : இறைவன் திருவடி இன்பம், உலக இன்பம் போன்று தோன்றி மறையக்கூடியதன்றாதலின், எங்கும் இல்லாததோர் இன்பம் ஆயிற்று. இறைவன் தன் அடியார்பால் தானே வந்து தலையளித்து ஆட்கொள்கின்ற கருணையை, ‘இங்கு நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகன்’ என்று சொல்லிப் புகழ்ந்தனர். இவ்வாறு அவன் செய்த உபகாரத்தை எண்ணி வாயாராப் பாடி ஆடினால் நன்மையடைதல் உறுதியாதலின், ‘பாடி நலம் திகழ’ என்றனர். இது நீராடுங்கால் ஒருத்தியை நோக்கி ஏனைய பெண்கள் கூறியபடியாம். இதனால், இறைவன் தன் திருவடி இன்பத்தைத் தானே எளி வந்தருளுகிறான் என்பது கூறப்பட்டது. 17 அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். பதப்பொருள் : பெண்ணே - தோழியே, அண்ணாமலையான் - திருவண்ணாமலை அண்ணலது, அடிக்கமலம் - திருவடித்தாமரையை, சென்று இறைஞ்சும் - போய் வணங்குகின்ற, விண்ணோர் முடியின் - தேவர்களது முடியிலுள்ள, மணித்தொகை - இரத்தினங்களின் தொகுதி, வீறு அற்றாற்போல் - ஒளி இழந்தாற்போல, கண்ணார் இரவி கதிர் வந்து - கண்ணுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றினமையால், கார் கரப்ப - இருளானது மறைய, தாரைகள் - நட்சத்திரங்கள், தண் ஆர் ஒளி மழுங்கி அகல - குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய, அப்போழ்தில், பெண் ஆகி - பெண்ணாகியும், ஆண் ஆய் - ஆணாகியும், அலி ஆய் -
|