279


ஒளி போலும் பிரகாசத்தையும், வானம் போலும் மேன்மையும் தர வல்லது திருவடி என்பது குறிப்பு.

இதனால், இறையனுபவம் கூறப்பட்டது.

4

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலமன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.

பதப்பொருள் : கல்லா மனத்து - கல்லாத மனத்தையுடைய, கடைப்பட்ட நாயேனை - கீழ்ப்பட்ட நாய் போன்ற என்னை, வல்லாளன் - பேராற்றலுடையானாகிய, தென்நன் பெருந்துறையான் - அழகிய நல்ல திருப்பெருந்துறையை யுடையவன், பிச்சு ஏற்றி - பித்தேறச் செய்து, கல்லைப் பிசைந்து கனியாக்கி - மனமாகிய கல்லைக் குழைவித்துப் பழம் போல மென்மையாக்கி, தன் கருணை வெள்ளத்து அழுத்தி - தனது அருளாகிய வெள்ளத்திலே ஆழ்வித்து, வினை கடிந்த - எனது வினைமாசுகளை நீக்கியருளின, வேதியனை - அந்தணனை, தில்லைநகர் புக்கு - தில்லைநகரிற்புகுந்து, சிற்றம்பலம் மன்னும் - சிற்றம்பலத்தில் நிலைபெற்ற, ஒல்லை விடையானை - விரைந்து செல்லுதலையுடைய இடபவாகனனை, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக.

விளக்கம் : இறைவன் திருவடியை அடையும் முறையை அறிந்திலேன் என்பார், ‘கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேன்’ என்றார். ‘கல் ஆம் மனம்’ என்று பிரித்தலும் ஆம். திருப்பெருந்துறைப் பெருமான் ‘கல்லைப் பிசைந்து கனியாக்கும்’ திறமுடையானாதலின், ‘வல்லாளன்’ என்றார். தம்மைத் திருப்பெருந் துறையில் ஆட்கொண்ட பெருமான் தில்லையில் இருக்கக் கண்டமையால், ‘தில்லை நகர் புக்குச் சிற்றம்பலம் மன்னும் ஒல்லை விடையானை’ என்றார். இஃது அடிகளின் வரலாற்றைப் பற்றிய அகச்சான்றாகும்.

இதனால், இறைவன் வன்மையான மனத்தை மென்மையாக்கும் ஆற்றலுடையவன் என்பது கூறப்பட்டது.

5

கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித்
தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
ஆட்டாண்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்.