பதப்பொருள் : தோழி - தோழியே, ஒருவன் கிறி செய்த ஆறு - ஒருவன் மாயம் செய்த விதத்தை, கேட்டாயோ - நீ கேட்டனையோ? தீட்டு ஆர் மதில் - சித்திரத்தில் அமைத்த மதில், புடை சூழ் - பக்கத்திலே சூழப்பெற்ற, தென் நன்பெருந்துறையான் - அழகிய நல்ல திருப்பெருந் துறையையுடையவன், காட்டாதன எல்லாம் காட்டி - காட்டவொண்ணாத உண்மைப் பொருள்கள் எல்லாவற்றையும் காட்டி, சிவம் காட்டி - சிவமாகிய தன்னையே காட்டி, தாள்தாமரை காட்டி - திருவடித்தாமரைகளைக் காட்டி, தன் கருணைத் தேன் காட்டி - தன் அருளாகிய தேனைக் காட்டி, நாட்டார் நகை செய்ய - நாட்டிலுள்ளோர் நகைக்க, நாம் மேலை வீடு எய்த - நாம் மேன்மையாகிய வீட்டினை அடைய, ஆள் தான்கொண்டு - என்னைத் தான் அடிமைகொண்டு, ஆண்ட ஆறு - ஆட்கொண்ட விதத்தை, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக. விளக்கம் : மதில்கள் ஓவியங்கள் நிரம்பப் பெற்றிருத்தலின், ‘தீட்டார் மதில்’ என்றார். மறைந்து கிடக்கும் உண்மைப் பொருள்களை எல்லாம் முன்னே உணர்த்திப் பின் தன்னையே காட்டினான் என்பார், ‘காட்டாதன எல்லாங் காட்டிச் சிவங்காட்டி’ என்றார். பின் திருவடி மலரைக் காட்டி அதன் பயனாகிய திருவருள் தேனை நுகர்வித்தான் என்பார், ‘தாள்தாமரை காட்டித் தன் கருணைத் தேன்காட்டி’ என்றார். மலரில் தேன் பொருந்தியுள்ளது போலத் திருவடியில் அருள் பொருந்தியுள்ளது என்பது குறிப்பு. தேனை நுகர்ந்த வண்டு மயங்கியிருத்தல் போல, அருள் தேனை நுகர்ந்த அடிகள் உன்மத்த நிலை எய்தியிருந்தமையால் நாடவர் பழிக்கின்றனர் என்பார், ‘நாட்டார் நகை செய்ய’ என்றார். அம்மானை ஆடும் பெண்களில் இறைவன் அருளைப் பெற்ற ஒருத்தி கூறுவது போல அருளிச்செய்தலால், ‘கேட்டாயோ தோழி’ என அருளினார். இதனால், இறைவன் அடிகளுக்கு அருள் புரிந்தவாறு கூறப்பட்டது. 6 ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத் தாயான தத்துவத்தைத் தானே உலகேழும் ஆயான ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய். பதப்பொருள் : ஓயாதே - நீங்காதே, உள்குவார் உள் இருக்கும் - நினைப்பவர்களுடைய உள்ளத்தின்கண் வீற்றிருக்கும், உள்ளானை - உட்பொருளானவனும், சேயானை - நினையாதவர்க்கு அப்பாற்பட்டவனும், சேவகனை - பெருவீரனும், தென்
|