281


நன் பெருந்துறையில் மேயானை - அழகிய நல்ல திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனும், வேதியனை - அந்தணனும், மாது இருக்கும் பாதியனை - மங்கை நீங்காதிருக்கின்ற பாதித்திருமேனியை உடையவனும், நாய் ஆன நம்தம்மை - நாய் போன்ற நம்மை, ஆட்கொண்ட நாயகனை - அடிமை கொண்ட தலைவனும், தாய் ஆன தத்துவனை - நமக்குத் தாயாகிய மெய்யனும், தானே - தானொருவனே, உலகு ஏழும் ஆயானை - ஏழு உலகங்களுமாய் இருப்பவனும், ஆள்வானை - நம்மை ஆண்டருள்வோனும் ஆகிய இறைவனது புகழை, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக.

விளக்கம் : இடையறாது நினைப்பவரது உள்ளத்திலே வெளிப்பட்டுத் தோன்றுபவன் ஆதலின், ‘ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை’ என்றார். திருப்பெருந்துறையை எண்ணியதும் அந்தணக் கோலம் நினைவுக்கு வருதலின், ‘தென்னன் பெருந்துறையில் மேயானை’ என்றதும், ‘வேதியனை’ என்றார். ‘உலகேழும் ஆயானை’ என்பது, இறைவன் எல்லாப் பொருள் களிலும் கலந்திருக்கும் தன்மையைக் குறிப்பது.

இதனால், இறைவனது இயல்பு கூறப்பட்டது.

7

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.

பதப்பொருள் : பண் சுமந்த பாடல் - பண்களைக்கொண்ட பாடலுக்கு, பரிசு படைத்தருளும் - தக்க பரிசினை வழங்குகின்ற, பெண் சுமந்த பாகத்தன் - பெண் தங்கிய பாகத்தையுடையானும், பெம்மான் - பெருமானும், பெருந்துறையான் - திருப்பெருந்துறையில் இருப்பவனும், விண் சுமந்த கீர்த்தி - தேவலோகத்தவரும் புகழும்படியான கீர்த்தியையுடையவனும், வியன் - பெருமையமைந்த, மண்டலத்து ஈசன் - மண்ணுலகத்துக்கு இறைவனும், கண் சுமந்த நெற்றிக் கடவுள் - கண்ணைக் கொண்ட நெற்றியையுடைய கடவுளும் ஆகிய நம் பெருமான், கலிமதுரை - ஆரவாரத்தையுடைய மதுரையில், மண் சுமந்து - பிட்டு வாணிச்சிக்காக மண்ணைச் சுமந்து, கூலி கொண்டு - பிட்டைக் கூலியாகப் பெற்று, அக்கோவால் - பாண்டிய மன்னனால், மொத்துண்டு - அடியுண்டு, புண் சுமந்த - புண்பட்ட, பொன்மேனி - பொன்போலும் திருமேனியினது புகழை, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக.