விளக்கம் : பண், இசை வகை. இறைவன் இசைத்தமிழால் பாடுவோருக்கு மிகுந்த திருவருளைத் தருகின்றான் என்பார், ‘பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன்’ என்றார். ‘பாடற்கு’ என நான்கன் உருபு விரித்துக்கொள்க. ‘அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே’ என்ற அப்பர் திருவாக்கைக் காண்க. இறைவனது பெருமையைக் கூறவந்த அடிகள், ‘விண் சுமந்த கீர்த்தி’ என்றும், ‘வியன் மண்டலத்தீசன்’ என்றும் வாயாரக் கூறினார். ஆனால், பாண்டியனைக் கூற வந்தவர் ‘அக்கோவால்’ எனச் சுட்டியது அவனது சிறுமை கருதியேயாம். மண் சுமந்த வரலாறு கீர்த்தித் திருவகவலில் கூறப்பட்டது. இதனால், இறைவனது பெருங்கருணை கூறப்பட்டது. 8 துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் கண்டம் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான் அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். பதப்பொருள் : துண்டப் பிறையான் - ஒரு கலையையுடைய பிறையை அணிந்தவனும், மறையான் - வேதப்பொருளாயிருப்பவனும், பெருந் துறையான் - திருப்பெருந்துறையில் இருப்பவனும், கொண்ட புரிநூலான் - முப்புரி நூலை மார்பில் அணிந்தவனும், கோலமா ஊர்தியான் - அழகிய குதிரையின்மேல் ஊர்ந்து வந்தவனும், கண்டம் கரியான் - நீலகண்டத்தை உடையவனும், செம்மேனியான் - சிவந்த திருமேனியுடையவனும், வெள் நீற்றான் - திருவெண்ணீற்றையணிந்தவனும், அண்டம் - உலகங்களுக் கெல்லாம், முதல் ஆயினான் - காரணமானவனும் ஆகிய இறைவன், அந்தம் இலா ஆனந்தம் - முடிவில்லாத இன்பத்தை, பழவடியார்க்கு - தன் பழமை யாகிய தொண்டர்க்கு, அண்டம் - வியப்புறுமாறு - உலகம் அதிசயிக்கும் வண்ணம், ஈந்தருளும் - தந்தருள்கின்ற, பண்டைப் பரிசே - பழமையாகிய முறையையே, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக. விளக்கம் : துண்டம் - துண்டு. இங்கு ஒற்றைக்கலையை உணர்த்திற்று. மறையான் - மறையை உடையான் என்றும் கொள்ளலாம். இறைவன் தம்பொருட்டுக் குதிரைமேல் வந்ததை, ‘கோலமா ஊர்தியான்’ என்பதனால் உணர்த்தினார். அருளுடையான் என்பதைக் ‘கண்டம் கருமை’ காட்டிற்று. இறைவன் தொன்றுதொட்டு இன்றுவரை அடியார்க்கு அருள் செய்துவரும் முறையே பண்டைப் பரிசாம்.
|