284


செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினான்
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்.

பதப்பொருள் : செப்பு ஆர் முலை பங்கன் - கிண்ணம் போலும் தனங்களையுடைய உமாதேவியைப் பாகத்தில் உடையவனும், தென் நன் பெருந்துறையான் - அழகிய நல்ல திருப்பெருந்துறையில் இருப்பவனும், தப்பாமே - இடைவிடாமல், தாள் அடைந்தார், உருக்கும் - உருகச் செய்கின்ற, தன்மையினான் - தன்மையுடையவனும், அப்பாண்டி நாட்டை - பெருமை பொருந்திய அந்தப் பாண்டி நாட்டை, சிவலோகம் ஆக்குவித்த - சிவலோகமாகச் செய்வித்த, அப்பு ஆர் - கங்கை தங்கிய, சடை - சடையை யுடைய, அப்பன் - எம் தந்தையும், ஆனந்தம் - இன்பத்தைத் தருகின்ற, வார்கழலே - தனது நீண்ட திருவடிக்கே, ஒப்பு ஆக ஒப்புவித்த - தம்மை அடைக்கலமாகக் கொடுத்த, உள்ளத்தார் உள்ளிருக்கும் - மனத்தையுடையவ ராகிய அடியார்களது உள்ளத்துள்ளே வீற்றிருக்கின்ற, அப்பாலைக்கு அப்பாலை - இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட பொருளுக்கும் அப்பாற்பட்ட பொருளாய் இருப்பவனும் ஆகிய இறைவனது புகழை, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக.

விளக்கம் : நாள்தோறும் நியமமாக இறைவனை நினைத்துத் தொண்டு செய்தலே மெய்யடியார்கள் இயல்பாதலின், அவர்களது நெஞ்சினை அன்பினால் உருகச் செய்கின்றவன் இறைவன் என்பார், ‘தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான்’, என்றார். ‘நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்’ என்பது, அப்பர் திருவாக்கு. இறைவன் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்கியது, தேவர்கள் யாவரும் குதிரை வீரராய்ச் சூழ, தான் குதிரைமேல், பாண்டியன் முதல் யாவரும் காண மதுரையில் வந்து திருவிளையாடல் செய்தது. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய திருவிளையாடலைக் குறித்ததாகவும் கொள்ளலாம். இறைவன் கழற்கே ஒப்பாக ஒப்புவித்தலாவது, தம்மையே அடைக்கலமாகக் கொடுத்துத் தம் செயல் இன்றி இருத்தல். அங்ஙனமுள்ள அடியார்களது நெஞ்சத்தில் இறைவன் விரும்பி இருப்பான் என்றார். ‘ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும்’ என்றார். இவ்வுலகத்தையேயன்றி இதற்கு மேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் கடந்தவன் இறைவன் ஆதலின், ‘அப்பாலைக் கப்பாலை’ என்றார்.