285


இதனால், இறைவன், மெய்யடியார்களிடத்து விரும்பி இருப்பவன் என்பது கூறப்பட்டது.

11

மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்
எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால்
இப்பிறவி ஆட்கொண் டினிப்பிறவா மேகாத்து
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்
எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்
அப்பொருளாம் நம்சிவனைப் பாடுதுங்காண் அம்மானாய்.

பதப்பொருள் : மைப்பொலியும் கண்ணி - மை விளங்குகின்ற கண்ணையுடைய பெண்ணே, கேள் - நான் சொல்வதைக் கேட்பாயாக, மால் அயனோடு இந்திரனும் - திருமால் பிரமன் இவர்களோடு இந்திரனும், எப்பிறவியும் தேட - எல்லாப் பிறவிகளிலும் தன்னைத் தேடவும் அவர்களுக்குத் தோன்றாமல், தன் இன் அருளால் - தனது இனிய திருவருளினாலே, என்னையும் இப்பிறவி ஆட்கொண்டு - ஏனைய அடியார்கள் போல என்னையும் இப்பிறவியிலே குருவாய் வந்து ஆண்டு கொண்டு, இனிப் பிறவாமே காத்து - மேற்பிறவி எடாத வண்ணம் காப்பாற்றி, மெய்ப்பொருட்கண் தோற்றம் ஆய் - மெய்யான பொருளை அறியும் அறிவினிடத்து விளங்குபவனாய், மெய்யே நிலை பேறாய் - மெய்ப் பொருளாந்தன்மை ஒன்றே நிலைபெறுதற்கு இடமானவனாய், எப்பொருட்கும் தானே ஆய் - எல்லாப் பொருட்கும் முடிவிடமாயுள்ள, அப்பொருளாம் - அத்தகைய பரம்பொருளாகிய, நம் சிவனை - நம் சிவபெருமானது புகழை, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக.

விளக்கம் : பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் மருள் நீங்கி மெய்ப்பொருளை உணர்வாரது மெய்யறிவிலே விளங்கித் தோன்றுவான் இறைவனாதலின், ‘மெய்பொருட்கண் தோற்றமாய்’ என்றார். பிற பொருள்களில் மெய்த்தன்மை நிலையில்லாது நீங்கப் பொய்த்தன்மையே நிலை பெறும்; இறைவனிடத்தில் அவ்வாறன்றி மெய்த்தன்மை ஒன்றே நிலை பெறும் ஆதலின், ‘மெய்யே நிலைபேறாய்’ என்றார். சடமும் சித்துமாகிய எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாய் நின்று காத்தலின், ‘எப்பொருட்கும் தானேயாய்’ என்றார். உயிருள் பொருளுக்கும் உயிரில் பொருளுக்கும் முடிவாய இடம் இறைவனேயாதலின், ‘யாவைக்கும் வீடாகும்’ என்றார்.

இதனால், இறைவனது மெய்த்தன்மை கூறப்பட்டது.

12