கையார் வளைசிலம்பக் காதார் குழையாட மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச் செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். பதப்பொருள் : கை ஆர் - கைகளில் அணியப்பெற்ற, வளை சிலம்ப - வளையல் ஒலிக்கவும், காது ஆர் - காதில் அணியப்பெற்ற, குழை ஆட - குழை அசையவும், மை ஆர் - கருமை பொருந்திய, குழல் புரள - கூந்தல் புரளவும், தேன் பாய - அதன்கண்ணுள்ள மலர் விரிதலால் தேன் பெருகவும், வண்டு ஒலிப்ப - அதனை உண்ண வண்டுகள் ரீங்காரம் செய்யவும், செய்யானை - செந்நிறத்தை உடையவனும், வெண்ணீறு அணிந்தானை - திருவெண்ணீற்றை அணிந்தவனும், சேர்ந்து அறியாக்கையானை - உயிர்கள் தாமே சென்று அடைந்தறியாத இடத்தை உடையவனும், எங்கும் செறிந்தானை - எவ்விடத்தும் நிறைந்தவனும், அன்பர்க்கு மெய்யானை - அன்பர்க்கு உண்மைப் பொருளாய் விளங்குபவனும், அல்லாதார்க்கு - அன்பரல்லாதார்க்கு, அல்லாத - விளங்காத பொருளாய் இருப்பவனும், வேதியனை - வேதத்தை ஓதுபவனும், ஐயாறு அமர்ந்தானை - திருவையாற்றில் வீற்றிருப்பவனும் ஆகிய இறைவனது புகழை, அம்மானாய் - அம்மானைப்பாட்டாக, பாடுதும் - பாடுவோம். விளக்கம் : வளை அசைதலும் குழை ஆடுதலும் கூந்தல் புரளுதலும் அம்மானை ஆடுவதால் உண்டாகும். கூந்தல் புரளுதலால் மலர் விரிதலும், மலர் விரிதலால் தேன் பாய்தலும், தேன் பாய்தலால் வண்டு ஒலித்தலும் இயல்பேயாம். இவை, காரணகாரியமாய் அமைந்துள்ளன. ‘சேர்ந்தறியாக் கையான்’ என்றதற்கும் பிறரைத் தொழுதறியாத கையையுடையவன் என்றும் பொருள் கூறுவர். இதனால், இறைவன், தன் அன்பர்க்கே மெய்யன் என்பது கூறப்பட்டது. 13 ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனையப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும் வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். பதப்பொருள் : ஆனையாய் - யானையாகியும், கீடம் ஆய் - புழுவாகியும், மானுடராய் - மனிதராகியும், தேவராய்
|