துறையில் இருப்பவனது, மந்தார மாலையே - மந்தார மாலையினது சிறப்பையே, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக. விளக்கம் : சந்திரனைத் தேய்த்தது முதலியவை, தக்கன் வேள்வியிற் செய்யப்பட்டன. யாகத்தை நடத்தியவன் தக்கன்; யாகத்தின் அதிதேவதை எச்சன். ‘தக்கனையும் எச்சனையும் தலையறுத்து’ என்று திருச்சாழலிலும் அடிகள் பின்னர்க் கூறுவர். தக்கன் வேள்வி செய்தது : தக்கன் தவம் செய்து, உமையை மகளாகப் பெற்றுச் சிவபிரானுக்குக் கொடுத்துப் பின்பு செருக்கினால், அப்பெருமானை இகழ்ந்து ஒரு வேள்வி இயற்றினான்; அதற்கு அவரைத் தவிரப் பிற தேவர்களை அழைத்தான்; தாட்சாயணியாகிய தன் மகளையும் அழைத்தானில்லை; எனினும், தந்தை செய்யும் வேள்விக்குப் போக வேண்டும் என்று வந்த தேவியை அலட்சியம் செய்தான். சிவபிரான் வெகுண்டு வீரபத்திரரை ஏவி, சந்திரன் முதலிய தேவர்களை ஒறுத்து, தக்கனது தலையைக் கொய்வித்தான். தக்கன் செய்த மா வேள்வி தீமையாய் முடிந்தது இதனால், இறைவனது மறக்கருணை கூறப்பட்டது. 15 ஊனாய் உயிராய் உணர்வாய்என் னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோ ரறியா வழியெமக்குத் தந்தருளுந் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்குங் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். பதப்பொருள் : ஊன் ஆய் - உடலாகி, உயிர் ஆய் - உயிராகி, உணர்வு ஆய் - அதனுள் நின்ற உணர்ச்சியாகி, என்னுள் கலந்து - என்னுள்ளே பொருந்தி, எமக்கு - என் போன்றவர் பலர்க்கு, தேன் ஆய் - தேன் போலவும், அமுதமும் ஆய் - அமுதம் போலவும், தீங்கரும்பின் கட்டியும் ஆய் - இனிய வெல்லம் போலவும் இனிமையை உண்டாக்கி, வானோர் அறியா - தேவர்கள் அறியாத, வழி - முத்தி நெறியை, தந்தருளும் - கொடுத்தருளின, தேன் ஆர் மலர்க் கொன்றை - தேன் நிறைந்த கொன்றை மாலையை அணிந்த, சேவகனார் - வீரராகிய இறைவர், சீர் ஒளி சேர் - மேன்மையாகிய ஒளி பொருந்திய, அளவு கடந்த, பல் உயிர்க்கும் - பல உயிர்களுக்கும், கோன் ஆகி நின்ற ஆறு - தலைவராய் நின்ற முறைமையை, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, கூறுதும்-பாடுவோமாக.
|