விளக்கம் : உடல் கலப்பு உயிர்க் கலப்பு உணர்வுக் கலப்பு என்று இறைவன் கலப்பு மூவகை. ஒன்றுக்கொன்று நுட்பமாம். திருநாவுக்கரசரும் இம்மூவகைக் கலப்பினை, ‘ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி’ என்று திருவானைக்காத் திருத்தாண்டகத்தில் கூறுகிறார். அடிகளுக்கு ஊன் உயிர் உணர்வு ஆகியவற்றுள் கலந்து இனித்த பெருமான், பிற உயிர்க்கும் தலைவனாகி நின்றான் என்பர், ‘அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா’ என்றார். திருநாவுக்கரசரும், ‘பிற அனைத்தும் நீயேயாய் நின்றாய்’ என்றார். இதனால், இறைவன் எல்லா உயிர்க்கும் தலைவனாய் நின்ற திறம் கூறப்பட்டது. 16 சூடுவேன் பூங்கொன்றைச் சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின் றூடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். பதப்பொருள் : பூங்கொன்றை சூடுவேன் - சிவபிரான்மீது உண்டான வேட்கை மிகுதியால், யான் அவனது அழகிய கொன்றை மாலையை அணிவேன், சூடி - அணிந்து, சிவன் - அப்பெருமானது, திரள் தோள் - திரண்ட தோள்களை, கூடுவேன் - சேர்வேன், கூடி முயங்கி - கூடித் தழுவி, மயங்கி நின்று - மயங்கி நின்று, ஊடுவேன் - பிணங்குவேன், செவ்வாய்க்கு உருகுவேன் - சிவந்த வாயினைப் பெறுதற்கு மனம் உருகுவேன், உள் உருகித் தேடுவேன் - மனமுருகித் தேடுவேன், தேடி - தேடி, சிவன் கழலே சிந்திப்பேன் - அவனது திருவடியையே நினைந்திருப்பேன், வாடுவேன் - அவன் அருளைப் பெறாமையால் மெலிவேன், பேர்த்தும் மலர்வேன் - அதனைப் பெற இயலும் என்னும் உறுதியால் மீட்டும் மகிழ்வேன்; ஆகையால், அனல் ஏந்தி ஆடுவான் - தீ ஏந்தி ஆடுவானது, சேவடியே - சிவந்த திருவடியின் புகழையே, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - நாம் அனைவரும் பாடுவோமாக. விளக்கம் : வேட்கை மிகுந்த தலைவி தன் தோழியர்களுக்கு இவ்வாறு கூறினாள் என்க. கொன்றை மாலை இறைவனது அடையாள மாலையாதலின், அதனைச் ‘சூடுவேன்’ என்றும், ஊடுதல் இன்பத்தை மிகுவிக்குமாதலின், ‘ஊடுவேன்’ என்றும் கூறினாள். மனம் உருகித் தேடிச் சிந்தித்து வாடி இருத்தல் இறைவனை அடைதற்குரிய வழியாம். மலர்தல் இவ்விடத்துக் களித்தலுக்காயிற்று.
|