290


இதனால், இறைவனது இன்பம் பெற விழைவாரது நிலை கூறப்பட்டது.

17

கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை
வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனைத்
தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில்
எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால்
ஒளிவந்தென் உள்ளத்தி னுள்ளே ஒளிதிகழ
அளிவந்த அந்தணணனைப் பாடுதுங்காண் அம்மானாய்.

பதப்பொருள் : கிளி வந்த மெல் மொழியாள் - கிளி போன்ற மெல்லிய மொழியினையுடைய அம்மையின், கேழ்கிளரும் பாதியனை - ஒளி விளங்கும் பாகத்தவனும், வெளி வந்த -காண்போமென்று வெளிப்பட்டு வந்த, மால் அயனும் - திருமாலும் பிரமனும், காண்பு அரிய - காணுதற்கு அருமையான, வித்தகனை - ஞான வடிவனும், தெளிவந்த தேறலை - அடியார் உள்ளத்தே தெளிவாய் வந்த தேன் போன்றவனும், சீர் ஆர் பெருந்துறையில் - சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையில், எளி வந்திருந்து - எளிதாய் வந்திருந்து, இரங்கி - இரக்கம் செய்து, எண் அரிய - நினைத்தற்கு அருமையான, இன் அருளால் - இனிய கருணையால், ஒளி வந்து - ஞான உருவாய் வந்து, என் உள்ளத்தினுள்ளே - என் மனத்தினுள்ளே, ஒளி திகழ - ஞான ஒளி விளங்கும் வண்ணம், அளி வந்த - அருள் புரிந்த, அந்தணனை - வேதியனும் ஆகிய இறைவனது புகழை, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக.

விளக்கம் : கிளி வந்த என்றதில் ‘வந்த’ உவம உருவு; கிளி போன்ற மொழி என்ற பொருளில் வந்தது. உள்ளே தேட வேண்டிய பெருமானை வெளியே தேடினார்களாதலின், ‘வெளி வந்த மாலயனும்’ என்றார். ஆனால், அடியார்கள் சித்தத்தைச் சிவன்பாலே வைத்திருப்பாராதலின் அங்கே தித்தித்திருப்பான் என்பார், ‘தெளிவந்த தேறலை’ என்றார். ஞானமுடையவனே ஞானத்தை நல்க முடியுமாதலின், ‘ஒளியாய் வந்து ஒளி திகழச் செய்தான்’ என்றார்.

இதனால், இறைவன் ஞானத்தைத் தருபவன் என்பது கூறப்பட்டது.

18

முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியாலும் பாதியனைத்
தென்னானைக் காவானதை் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட் கின்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்.