அல்லாமல், எடுக்க ஒட்டோம் - அவ்வறுகினை எடுக்க விட மாட்டோம், செறிவு உடை - நெருங்கிய, மும்மதில் - முப்புரத்தை, எய்த வில்லி - எய்து அழித்து வில்லையுடையவனாகிய, திருவேகம்பன் - திருவேகம்பனது, செம்பொற் கோயில் பாடி - செம்பொன்னாலாகிய கோயிலைப் பாடி, முறுவல் செவ்வாயினீர் - நகையோடு கூடிய சிவந்தை வாயினையுடையீர், முக்கண் அப்பற்கு ஆட - மூன்று கண்களையுடைய எம் தந்தைக்குப் பூசிக் கொள்ளும் பொருட்டு, பொற்சுண்ணம் - பொன்போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம். விளக்கம் : அறுகெடுத்தலாவது, அறுகம்புல்லை எடுத்துப் பசுவின் நெய்யில் தோய்த்துத் தலை முதலிய இடங்களில் தெளித்தல். இதனை நெய்யேற்றுதல் என்றும் கூறுவர். தேவகணமாவது, சித்தர் முதலிய பதினெண் கணத்தை. இவர்கள், அயனும் மாலும் தம் அதிகாரத்தால் முதலிற்சென்று அறுகெடுத்தலைக் கண்டு மனம் புழுங்கி ஒன்றும் செய்யமாட்டாதவராய் இருப்பார் என்பார், ‘நறுமுறு தேவர் கணங்கள்’ என்றார். அத்தகைய தேவர்களுக்கும் முன்னே நாம் சென்று அறுகெடுப்போம் என்பார், ‘நம்மிற்பின்பல்லது எடுக்கவொட்டோம்’ என்றார். இறைபணியில் ஈடுபட்டோர் ஆனந்தத்தில் மூழ்கியிருப்பராதலின், ‘முறுவற்செவ்வாயினீர்’ என அழைக்கப்பட்டனர். இதனால், இறை பணியிலுள்ள வேட்கை கூறப்பட்டது. 5 உலக்கை பலஓச்சு வார்பெரியர் உலகமெ லாமஉரல் போதாதென்றே கலக்க அடியார் வந்துநின்றார் காண உலகங்கள் போதாதென்றே நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழ்ந்துபொற் சுண்ணம் இடித்தும்நாமே. பதப்பொருள் : உலகமெல்லாம் - இவ்வுலகம் முழுவதும், உரல் போதாது என்று - உரல்களை வைப்பதற்கு இடம் போதாது என்று சொல்லும்படி, பெரியர் - பெரியவர் பலர், உலக்கை பல ஓச்சுவார் - பல உலக்கைகளைக் கொண்டு ஓங்கி இடிப்பார்கள், உலகங்கள் போதாது என்று - உலகங்கள் பலவும் இடம் போத மாட்டா என்னும்படி, அடியார் - அடியவர், கலக்க - ஒன்று கூடி, காணவந்து நின்றார் - பார்ப்பதற்கு வந்து நின்றனர், நலக்க - நாம் நன்மையடைய, அடியோமை ஆண்டுகொண்டு - அடியார்களாகிய நம்மை ஆட்கொண்டருளி, நாள் மலர் - அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற, பாதங்கள் - திருவடிகளை, சூடத்தந்த - நாம் சென்னிமேல் சூடிக்கொள்ளும்படி கொடுத்த,
|