செய்ய திருவடி பாடிப்பாடிச் செம்பொன் உலக்கை வலக்கைபற்றி ஐயன் அணிதில்லை வாணனுக்கே ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. பதப்பொருள் : வையகம் எல்லாம் உரல் ஆக - உலக முழுதும் உரலாகக் கொண்டு, மாமேரு என்னும் உலக்கை நாட்டி - மகாமேரு என்கிற உலக்கையை உள்ளத்திலே நிலை நாட்டி, மெய்யெனும் மஞ்சள் நிறைய ஆட்டி - உண்மை என்கிற மஞ்சளை நிறைய இட்டு, மேதகு - மேன்மை தங்கிய, தென்னன் பெருந்துறையான் - அழகிய நல்ல திருப்பெருந்துறையில் இருப்பவனது, செய்ய திருவடி - செம்மையாகிய திருவடியை, பாடிப்பாடி - பலகாற்பாடி, செம்பொன் உலக்கை - செம்பொன் மயமான உலக்கையை, வலக்கை பற்றி - வலக்கையிற்பிடித்து, ஐயன் - தலைவனாகிய, அணி - அழகிய, தில்லை வாணனுக்கு - திருத்தில்லையில் வாழும் சிவபெருமானுக்கு, ஆட - திருமுழுக்கின்பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம். விளக்கம் : பொற்சுண்ணம் இடிக்குங்கால் உலகமே உரல் என்றும், உலக நடுவில் உள்ள மகாமேருவே உலக்கை என்றும், வாய்மையே மஞ்சள் என்றும் பாவனை பண்ண வேண்டும் என்பதாம். இறைவன் திருவடிப் புகழ்ச்சியே இங்கு உரற்பாட்டு ஆதலின், ‘செய்ய திருவடி பாடிப்பாடி’ என்றார். இதனால், இறைவன் பொற்சுண்ணத்தின் உண்மை நிலை கூறப்பட்டது. 9 முத்தணி கொங்கைகள் ஆடஆட மொய்குழல் வண்டினம் ஆடஆடச் சித்தஞ் சிவனொடும் ஆடஆடச் செங்கயற் கண்பனி ஆடஆடப் பித்தெம் பிரானொடும் ஆடஆடப் பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருணையொ டாடஆட ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. பதப்பொருள் : முத்து அணி கொங்கைகள் - முத்து வடமணிந்த தனங்கள், ஆட ஆட - அசைந்து ஆடவும், மொய்குழல் வண்டு இனம் - நெருங்கிய கூந்தலிலுள்ள வண்டுக் கூட்டங்கள், ஆட ஆட - எழுந்து ஆடவும், சித்தம் சிவனொடும் - மனமானது சிவபெருமானிடத்தில், ஆட ஆட - நீங்காதிருக்கவும், செங்கயல் கண் - செங்கயல் மீன் போன்ற கண்கள், பனி ஆட ஆட - நீர்த்துளிகளை இடைவிடாது சிந்த, பித்து - அன்பு, எம்பிரானொடும் - எம்பெருமானிடத்தில், ஆட ஆட - மேன்மேற்
|