பெருகவும், பிறவி பிறரொடும் - பிறவியானது உலகப் பற்றுள்ள பிறரோடும், ஆட ஆட - சூழ்ந்து செல்லவும், அத்தன் - எம் தந்தையாகிய சிவபெருமான், கருணையொடு - அருளொடு, ஆட ஆட - நம்முன் விளங்கித் தோன்றவும், ஆட - அவன் திருமுழுக்கின்பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம். விளக்கம் : தனங்கள் அசைந்து ஆடுதலும், வண்டுகள் எழுந்து ஆடுதலும் பொற்சுண்ணம் இடித்தலால் உண்டாவன. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தலால் கண்ணீர் அரும்பலும், இறைவனிடத்தில் அன்பு வைத்தலால் அவன் விளங்கித் தோன்றுதலும் உண்டாம் என்கின்ற காரணகாரிய முறையாய் அமைந்துள்ள இந்நயம் அறிந்து இன்புறத் தக்கது. இறைவனைப் பற்றாதார் பிறவியைப் பற்றுவார் என்பது, ‘பிறவி பிறரொடும் ஆட ஆட’ என்பதனாற்புலனாகிறது. இதனால், இறைவழிபாட்டின் அனுபவம் கூறப்பட்டது. 10 மாடு நகைவாள் நிலாஎறிப்ப வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும் பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெரு மானைத்தேடிச் சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக் காடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. பதப்பொருள் : மாடு - (பெண்களே) பக்கங்களில், நகைவாள் - பல்லினது ஒளி, நிலா எறிப்ப - நிலவு போன்று ஒளி வீசவும், அம்பவளம் - அழகிய பவளம் போன்ற உதடுகள், துடிப்ப - துடிக்கவும், வாய் திறந்து - வாயைத் திறந்து, பாடுமின் - பாடுங்கள், நந்தம்மை ஆண்டவாறும் - நம்மை அவன் ஆண்டுகொண்ட வழியையும், பணி கொண்ட வண்ணமும் - இறை பணியிலே நிற்கச் செய்ததையும், பாடிப் பாடி - அவ்வாறு இடைவிடாது பாடி, எம்பெருமானைத் தேடுமின் - எம்பெருமானைத் தேடுங்கள், தேடி - அவ்வாறு தேடி, சித்தம் களிப்ப - மனம் உன்மத்த நிலையையடைய, திகைத்து - தடுமாறி, தேறி - பின்னர் மனம் தெளிந்து, ஆடுமின் - ஆடுங்கள், அம்பலத்து - தில்லையம்பலத்தில், ஆடினானுக்கு - நடனஞ் செய்தவனுக்கு, ஆட - திருமுழுக்கின்பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.
|