302


விளக்கம் : நிலா என்பது பல்லினது ஒளிக்கும், பவளம் என்பது உதட்டினது நிறத்துக்கும் உவமையாயின. இவை, பொற்சுண்ணம் இடிக்கும் பெண்களது இளமையைக் காட்டின.

‘நந்தம்மை ஆண்டவாறும்’ என்றதனால், இறைவன் குருவாய் எழுந்தருளி வந்த ஆண்ட தன்மையையும், ‘பணி கொண்ட வண்ணமும்’ என்றதனால், ஆட்கொண்டதோடு நில்லாமல் இறைபணியிலேயும் நிற்கச் செய்தமையையும் குறிப்பிட்டார், இறைபணி நிற்றலாவது, எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணியிருத்தல்.

இதனால், இறைவன் ஆன்மாக்களை ஆட்கொண்டு, இறைபணியில் நிற்கச் செய்கிறான் என்பது கூறப்பட்டது.

11

மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை
ஐயனை ஐயர்பி ரானைநம்மை
அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோள்
பையர வல்குல் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.

பதப்பொருள் : போது - தாமரை மலர் போன்ற, அரி - செவ்வரி படர்ந்த, இணைகண் - இரண்டு கண்களையும், பொன் தொடித்தோள் - பொன் வளையணிந்த தோள்களையும், அரவுபை - பாம்பின் படம் போன்ற, அல்குல் - அல்குலையுமுடைய, மடந்தை நல்லீர் - மடந்தைப் பருவத்தை யுடைய பெண்களே, மை அமர் கண்டனை - கருமையமைந்த கழுத்தினை யுடையவனும், வான நாடர் மருந்தினை - விண்ணுலகத்தாருக்கு அமுதமாயிருப்பவனும், மாணிக்கக் கூத்தன் தன்னை - செம்மை நிறமுடைய கூத்தனும், ஐயனை - தேவனும், ஐயர் பிரானை - தேவர்க்குத் தலைவனும், நம்மை அகப்படுத்து - நம்மைத் தன் வயப்படுத்தி, ஆட்கொண்டு - அடிமை கொண்டு, அருமை காட்டும் - தனது அரிய தன்மையைப் புலப்படுத்தின, பொய்யர் தம் பொய்யனை - பொய்மையாளருக்குப் பொய்மையானவனும், மெய்யர் மெய்யை - மெய்மையாளருக்கு மெய்மையானவனுமாகிய இறைவனை, பாடி - பாடி, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் : ‘மாணிக்கம்’ என்றதால், இறைவனது நிறமும், ‘கூத்தன்’ என்றதால், அவனது இயல்பும் கூறியவாறாம். அருமை காட்டலாவது, தன் இயல்பைக் காட்டிப் பேரின்பம் தருதலாம். அன்பில்லாதார்க்கு இறைவன் விளங்கித் தோன்ற மாட்டானாதலின், ‘பொய்யர்தம் பொய்யனை’ என்றார்.