சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத் தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாயித ழுந்துடிப்பச் சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கை இரைக்க அராஇரைக்குங் கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப் பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே. பதப்பொருள் : சேயிழையீர் - செம்மையாகிய அணிகளையுடைய பெண்களே, சங்கம் அரற்ற - சங்க வளையல் ஒலிக்கவும், சிலம்பு ஒலிப்ப - காற்சிலம்பு ஒலிக்கவும், தாழ்குழல் - நெடிய கூந்தலில், சூழ்தரு - சுற்றிய, மாலை ஆட - பூமாலை அசையவும், வாய் - வாயிலுள்ள, செங்கனி - சிவந்த கொவ்வைக் கனி போலும், இதழும் துடிப்ப - உதடும் துடிக்கவும், சிவலோகம் பாடி - சிவபுரத்தின் பெருமையைப் பாடி, கங்கை இரைக்க - கங்கை வெள்ளம் சத்திக்க, அரா இரைக்கும் - பாம்பு நடுங்கி ஒலிக்கின்ற, கற்றைச் சடை முடியான் - திரட்சியான சடையையடைய இறைவனது, கழற்கு - திருவடிக்கு, பொங்கிய காதலின் - மிகுந்த விருப்பத்தால், கொங்கை பொங்க - தனங்கள் விம்ம, பொற்றிருச்சுண்ணம் - பொன் போலும் அழகிய வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம். விளக்கம் : சிவபுரத்தைப் பாடுவதால் இன்பம் உண்டாகிறது என்பார், ‘வாயிதழும் துடிப்ப’ என்றார். கங்கை ஒலியை இடிமுழக்கம் என்று எண்ணி அஞ்சுவதால் பாம்பு இரைகின்றது என்பார், ‘கங்கை இரைக்க அரா இரைக்கும்’ என்றார். இதனால், இறையுணர்வின் இன்பம் கூறப்பட்டது. 14 ஞானக் கரும்பின் தெளிவைப்பாகை நாடற் கரிய நலத்தைநந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானனைச் சித்தம் புகுந்துதித் திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானல் தடங்கண் மடந்தைநல்லீர் பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. பதப்பொருள் : பானல் - கருங்குவளை மலர் போன்ற, தடங்கண் - பெரிய கண்களையுடைய, மடந்தை நல்லீர் - இளம் பெண்களே, ஞானக் கரும்பின் தெளிவை - ஞானமாகிய கருப்பஞ்சாற்றின் தெளிவானவனும், பாகை - அதன் பாகான
|