305


வனும், நாடற்கு அரிய நலத்தை - தேடுவதற்கு அருமையான நம்மைப் பொருளானவனும், நந்தாத்தேனை - சுவை கெடாத தேனானவனும், பழச்சுவையாயினானை - முக்கனிகளின் சுவையானவனும், சித்தம் புகுந்து - மனத்தில் புகுந்து, தித்திக்க வல்ல கோனை - இனிக்க வல்ல தலைவனும், பிறப்பு அறுத்து - பிறவித்தளையை அறுத்து, ஆண்டுகொண்ட - ஆண்டுகொண்டருளின, கூத்தனை - கூத்தப் பெருமானுமாகிய இறைவனை, நாத்தழும்பேற - நாவில் வடுவுண்டாகும்படி, வாழ்த்தி - துதித்து, பாடி - பாடி, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் : ‘ஞானக் கரும்பு’ உருவகம். தெளிவு - சாறு, பாகு, அதனைக் காய்ச்சியது. தெளிவைவிடப் பாகு சுவையுடைய பொருள். எனவே, ‘தெளிவைப் பாகை’ எனப் பிரித்துக் கூறினார். தேன் நாளடைவில் கெடுதல் அடையும். ஒரு நாளும் கெடுதல் அடையாத இறைவனை ‘நாந்தாத் தேன்’ என்றார். பழச்சுவையாவது, மா பலா வாழையாகிய முக்கனியின் சுவை.

இதனால், இறைவன் சுவைப்பொருளாய்த் தித்திக்க வல்லவன் என்பது கூறப்பட்டது.

15

ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோ
டாட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல்
தேவர் கனாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச்
சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சிவபெரு மான்புரம் செற்றகொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும்நாமே.

பதப்பொருள் : நாமும் - நாமும், அன்பர் தம்மோடு வந்து - அன்பரோடு கூடி வந்து, ஆவகை - உய்யும் வகையில், ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி - பணி செய்யும் வகைகளைப் பாடி, விண்மேல் - விண்ணுலகத்திலுள்ள, தேவர் - தேவர்கள், கனாவிலும் கண்டறியா - கனவிலும் கண்டறியாத, செம்மலர்ப் பாதங்கள் - செந்தாமரை மலர் போலும் திருவடிகளை, காட்டும் - எமக்குக் காட்டுகின்ற, செல்வச் சே அகம் ஏந்திய - செல்வமாகிய காளையை அகத்தே கொண்ட, வெல் கொடியான் - வெற்றியையுடைய கொடியையுடையவனும், சிவபெருமான் - சிவபெருமானும், புரம் செற்ற - முப்புரங்களை அழித்த, கொற்றச் சேவகன் - வெற்றியை யுடைய வீரனுமாகிய இறைவனது, நாமங்கள் பாடிப்பாடி - திருநாமங்களைப் பரவி, செம்பொன் செய்சுண்ணம் - சிவந்த பொன் போல ஒளியைத் தருகின்ற வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.