முன்னைத் தவப்பயனால் மலைமீதேறிப் பெருமானைக் கண்டார்; அன்பு கொண்டார்; இலிங்கத்தின்மேல் பூவும் பச்சிலையும் இருக்கக் கண்டு, அவற்றை அந்தணர் ஒருவர் சார்த்தி வழிபட்ட முறையை நாணன் கூறக் கேட்டார். பின்பு வாயாகிய கலசத்தில் நீரை முகந்துகொண்டும், பூவும் பச்சிலையும் பறித்துத் தலையில் வைத்துக்கொண்டும், வேட்டையாடிய இறைச்சியாகிய உணவைத் தேடிக் கொண்டுவந்தும், இலிங்கத்தின்மீதிருந்த பூ முதலியவற்றைத் தம் செருப்புக்காலால் நீக்கி, தாம் கொணர்ந்த நீரை உமிழ்ந்து பூவையும் இலையையும் சொரிந்து, ஊனமுதை இட்டு வழிபட்டார்; இங்ஙனம் ஐந்து நாள்கள் வழிபாடாற்றினார். இதைக் கண்டு மனம் பொறாது வருந்திய சிவகோசரியாருக்குத் திண்ணனாரின் அன்பைப் புலப்படுத்த எண்ணிய இறைவன், ஆறாம் நாள் தன் கண்ணில் உதிரம் சொரியச் செய்தான். இதைக் கண்ட திண்ணனார் துடிதுடித்துத் தம் கண்ணையே இடந்து அப்பினார். இறைவனது மற்றொரு கண்ணிலும் உதிரம் வரக் கண்டு தமது மற்றொரு கண்ணையும் அம்பினால் தோண்டும் போது இறைவன், ‘நில்லு கண்ணப்ப’ எனத் தடுத்து நாயனாரின் அன்பை வெளிப்படுத்தினான். இதனால், இறைவனது கருணை கூறப்பட்டது. 4 அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ. பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! அவர் தேவர் - அவரே கடவுள், அத்தேவர் தேவர் - அவரே அந்தத் தேவர்களுக்கெல்லாம் தேவர், என்று - என்று, இங்ஙன் - இவ்வாறு, பொய்த்தேவு பேசி - கடவுளர் அல்லாதவர்களைப் புகழ்ந்து, புலம்புகின்ற - பிதற்றுகின்ற, பூதலத்தே - பூலோகத்தில், பத்து ஏதும் இல்லாது - உலகப்பற்று சிறிதுமின்றி, என் பற்று அற - என்னுடைய பற்றுகள் அறும்படி, நான் பற்றி நின்ற - நான் பற்றிக்கொண்டிருக்கிற, மெய்த்தேவர் தேவர்க்கே - உண்மையாகிய தேவர் பிரானிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக. விளக்கம் : சிவன் ஒருவனைத் தவிர ஏனையோரைப் பரம்பொருள் என்றல், உபசாரமேயன்றி உண்மையன்று என்பார், ‘பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே’ என்றார். உலகப் பற்றை விடுதற்கு இறைவனது பற்றைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பார், ‘பத்தேதும் இல்லாதென் பற்றற நான் பற்றி நின்ற மெய்த் தேவர்’ என்றார், ‘பற்றற்றான் பற்றினைப் பற்றுக அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்ற நாயனார் வாக்கையும் ஒப்பு நோக்குக.
|