316


யுடையவனது, சரணங்களே - திருவடிகளையே, சென்று சார்தலும் - சென்று அடைதலும், எனக்கு - அடியேனுக்கு, மரணம் பிறப்பு என்ற - இறப்பு பிறப்பு என்று சொல்லப்பட்ட, இவை இரண்டின் - இவை இரண்டால் வரக்கூடிய, மயக்கு அறுத்த - மயக்கத்தைப் போக்கின, கருணைக்கடலுக்கே - கருணைக்கடல் போன்றவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் : இறைவன் கரணங்களின் துணைகொண்டு காண முடியாதவன் ஆதலின், ‘கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றன்’ என்றும், அவனைத் திருவருளின் துணைகொண்டு காணலாம் ஆதலின், ‘கறைமிடற்றன் சரணங்களே சென்று சார்தலுமே’ என்றும் கூறினார். இறைவன் திருவடியை அடைந்தும், வினையும் அதனால் வரும் பிறவியும் பற்றா ஆதலின், ‘மரணம் பிறப்பென்றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடல்’ என்றார்.

இதனால், இறைவன் திருவடியைச் சார்ந்தவர் பிறவித்துன்பம் நீங்குவர் என்பது கூறப்பட்டது.

9

நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்று செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்
தாயுற்று வந்தென்னை ஆட்கொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! நான் நோயுற்று - நான் பிணியையடைந்து, மூத்து - முதிர்ந்து, நுந்து கன்றாய் இங்கு இருந்து - தாய்ப்பசுவால் தள்ளப்பட்ட கன்றையொத்தவனாய் இவ்விடத்திலிருந்து, நாய் உற்ற செல்வம் - நாய் பெற்ற இழிந்த செல்வம் போன்ற இவ்வுலக இன்பத்தை, நயந்து அறியா வண்ணம் - விரும்பி அனுபவியாதபடி, எல்லாம் - எல்லா வகையாலும், தாய் உற்று வந்து - தாய் போல எழுந்தருளி, என்னை ஆட்கொண்ட - என்னை அடிமை கொண்ட, தன் கருணைத் தேயுற்ற செல்வற்கே - தன் கருணையாகிய ஒளி பொருந்திய செல்வனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் : நுந்து கன்றாவது, தாய்ப்பசுவினால் பால் கொடுக்காமல் உதைத்துத் தள்ளப்பட்ட கன்றாம். நாயுற்ற செல்வமாவது, மாமிசம் எலும்பு முதலிய இழிந்த பொருளாம். தாயுற்று வருதலாவது, துன்பத்தினின்றும் எடுத்து இன்பத்தைக் கொடுக்க வருதல். தேசு, ‘தேயு’ எனத் திரிந்தது.

இதனால், உலக இன்பத்தின் இழிவு கூறப்பட்டது.

10

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.