317


பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! வன்னெஞ்சக் கள்வன் - வலிய நெஞ்சினையுடைய கரவுடையவன், மனவலியன் - திருந்தாத மனவலிமையுடையவன், என்னாது - என்று நீக்காமல், கல்நெஞ்சு உருக்கி - கல்லைப் போன்ற என் மனத்தை உருகச் செய்து, கருணையினால் - தன் பெருங்கருணையினால், ஆண்டு கொண்ட - என்னை ஆட்கொண்டருளின, அன்னம் திளைக்கும் - பொய்கையில் அன்னப்பறவைகள் மூழ்கி விளையாடு கின்ற, அணிதில்லை அம்பலவன் - அழகிய தில்லையம்பலவாணனது, பொன் அம் கழலுக்கே - பொன்னால் ஆகிய அழகிய கழலணிந்த திருவடியிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் : ‘வன்னெஞ்சக் கள்வன்’ என்றது இறைவனிடத்தில் அன்பு கொண்டு உருகாத நிலையையும், ‘மனவலியன்’ என்றது, அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாது எத்தகைய தீய செயலையும் செய்யத் துணிதலையும் குறித்தனவாம்.

இதனால், இறைவன் வலிய நெஞ்சத்தையும் உருக்கி ஆட்கொள்ள வல்லான் என்பது கூறப்பட்டது.

11

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேனும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! நாயேனை - நாய் போன்ற என்னை, தன் அடிகள் பாடுவித்த - தன்னுடைய திருவடிகளைப் பாடும்படி செய்த, நாயகனை - இறைவனும், பேயேனது - பேய்த்தன்மை யுடையேனது, உள்ளப் பிழை பொறுக்கும் - மனக்குற்றங்கள் மன்னிக்கும், பெருமையனை - பெருமையுடையவனும், சீ ஏதும் இல்லாது - இகழ்தல் சிறிதும் இல்லாமல், என் செய் பணிகள் கொண்டருளும் - யான் செய்யும் தொண்டுகளை ஏற்றருள்கின்ற, தாயான ஈசற்கே - தாயானவனுமாகிய இறைவனிடமே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் : இறைவன் பாட வல்ல அடியார்களைத் தன்னைப் பாடும் பணியிலே நிற்கச்செய்து அருள் புரிகின்றான் என்பது ‘நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகன்’ என்பதனால் விளங்குகிறது. ‘மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயால்’ என்ற தடுத்தாட் கொண்ட புராணத்தையும் நோக்குக. அடிகள் பாடிய வாசகத்தை இறைவனே எழுதிக் கொண்டான் என்றதற்கு இஃது அகச்சான்று. பேய்த்தன்மையாவது, அலையுந்தன்மையாம். தாயானவள் சேயினது