குற்றத்தைப் பொறுத்துப் பரிவும் காட்டுவாளாதலின், இறைவனை ‘தாயான ஈசன்’ என்றார். இதனால், பாடும் பணி இறைவனுக்கு மிகவும் உவகையைத் தருவது என்பது கூறப்பட்டது. 12 நான்தனக் கன்பின்மை நானுந்தானும் அறிவோம் தான்என்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார் ஆன கருணையும் அங்குற்றே தானவனே கோனெனைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! நான் - யான், தனக்கு அன்பு இன்மை - இறைவன்பால் அன்பு இல்லாதிருத்தலை, நானும் தானும் அறிவோம் - நானும் அவனும் அறிவோம், தான் என்னை ஆட்கொண்டது - அவன் என்னை அடிமையாகக் கொண்டதை, எல்லோருந்தாம் அறிவார் - உலகினர் எல்லோருமே அறிவார்கள், கோன் - என் தலைவனாகிய இறைவன், ஆன கருணையும் அங்கு உற்று - முன்பு உண்டாகிய கருணையைப் போல இப்பொழுதும் கொண்டு, அவன்தானே - அவனாகவே வந்து, என்னைக்கூட - என்னைக் கூடும்படி, குளிர்ந்து ஊது இனிமையாய் ஊதுவாயாக. விளக்கம் : ‘தான் என்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்’ என்றது, இறைவன் திருப்பெருந்துறையில் குருவாய் எழுந்தருளி ஆட்கொண்டதை. மீண்டும் தன் முன் எழுந்தருளி வருதலாகிய திருவருளைச் செய்ய வேண்டும் என்பார், ‘ஆன கருணையும் அங்குற்றே எனைக்கூட’ என்றார். ‘தான் அவனே’ என்றதை ‘அவன் தானே’ என்று மாற்றிக்கொள்க. இதனால், இறைவன் பெருங்கருணையாளன் என்பது கூறப்பட்டது. 13 கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ. பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! உலகினுக்கு - உலகத்துக்கு, கரு ஆய் - பிறப்பிடமாய், அருவாய் - அருவமாய், அப்புறமாய் - அப்பாற்பட்டதுமாகி, இப்புறத்து - இவ்வுலகத்தில், மரு ஆர் - மணம் நிறைந்த, மலர் - மலரையணிந்த, குழல் - கூந்தலையுடைய, மாதினொடும் - உமையம்மையோடும், மறைபயில் - வேதங்களை ஓதுகின்ற, அந்தணனாய் - வேதியனாய், வந்தருளி - எழுந்தருளி, ஆண்டுகொண்ட - என்னை அடிமை கொண்ட, திரு ஆன தேவர்க்கே - அழகிய தேவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.
|