இதனால், இறைவன் கல் போன்ற மனத்தையும் உருகச் செய்வான் என்பது கூறப்பட்டது. 9 கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவேய் அனவளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம் சினவேற்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : கனவேயும் - கனவிலுங்கூட, தேவர்கள் காண்பு அரிய - வானவர்கள் அறியவொண்ணாத, கனைகழலோன் - ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடியுடையோன், புனம் வேய் அன - காட்டு மூங்கில் போன்ற, வளை - வளையல் அணிந்த, தோளியொடும் - தோளினையுடைய உமாதேவியோடும், புகுந்தருளி - நிலவுலகத்திலே எழுந்தருளி, நனவே - விழித்திருக்கும் போதே, எனைப் பிடித்து - என்னைப் பற்றி, ஆட்கொண்ட ஆறு - ஆட்கொண்ட விதத்தை நெஞ்சம் நயந்து - மனத்தில் எண்ணி, சினவேல் கண் - கோபம் பொருந்திய வேல் போன்ற கண்ணிகளில், நீர் மல்க - நீர் நிறைந்து பாயா, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் கொட்டுவோம். விளக்கம் : காட்டு மூங்கில் செழுமையுடைத்தாதலின், தேவியின் தோளுக்கு உவமை கூறுவார், ‘புனவேய் அனதோளி’ என்றார். நெஞ்சம் நயத்தலாவது, இறைவன் கருணையை எண்ணி உருகுதல். இயல்பாகவே அழித்தல் தன்மையை உடைய வேலை, சினத்தால் அழிப்பது போல வைத்துச் ‘சினவேல்’ என்றார். இதனால், இறைவனது எளிவந்த கருணை கூறப்பட்டது. 10 கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக் கலந்தாண்டலுமே அயல்மாண்ட டருவினைச் சுற்றமும்மாண் டவனியின்மேல் மயல்மாண்டு மற்றுள்ள வாசகம்மாண் டென்னுடைய செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : கயல் மாண்ட - கயல் மீன் போல மாட்சிமைப்பட்ட, கண்ணிதன் பங்கன் - கண்களையுடைய உமா தேவியைப் பக்கத்திலு டையவன், எனைக் கலந்து ஆண்டலும் - என்னைக் கலந்து ஆண்டருளுதலும், அயல் மாண்டு - அயலார் என்பவர் இன்றி, அருவினைச் சுற்றமும் மாண்டு - அரிய வினையினால் வந்த உறவினர் என்பவர் இன்றி, அவனியின்மேல் மயல் மாண்டு - உலகத்தின்மீதுள்ள மயக்கம் நீங்கி, மற்று உள்ள வாசகம் மாண்டு - மற்றுள்ள சொல்லிறந்து, என்னுடைய செயல் மாண்ட ஆ பாடி - என்னுடைய செயலும் கெட்டு நின்ற நிலைமையைப் பாடி, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் கொட்டுவோம்.
|