330


விளக்கம் : மீன் தனது முட்டையைப் பார்த்தாலே அதனின்றும் குஞ்சு தோன்றும். அது போல, உமாதேவியின் கடைக் கண் பார்வையாலே உலகம் நலமடையும் என்பதாம். ஆடல் என்பது ஆண்டல் என வந்தது. ‘அருள் பெற்றமையால், அயல் என்றும் உறவு என்றும் எண்ணும் வேற்றுமை இல்லா தொழிந்தது’ என்பார், ‘அயல் மாண்டு அருவினைச் சுற்றமும் மாண்டு’ என்றார். உலகப் பற்று நீங்குதலை ‘மயல் மாண்டு’ என்றார். அருள்பெற்றார் தமக்கெனச் சொல்லும் செயலுமின்றி இருத்தலின், ‘வாசகம் மாண்டு என்னுடைய செயல் மாண்டு’ என்றார்.

இதனால், இறைவனது அருள் பெற்றார் நிலை கூறப்பட்டது.

11

முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட
அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு
பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி
தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.

பதப்பொருள் : முனிவர் குழாம் - முனிவர் கூட்டம், முத்திக்கு உழன்று - வீடு பெறுதற்பொருட்டு அலைந்து, நனிவாட - மிகவும் வாடவும், அத்திக்கு அருளி - யானைக்கு அருள் செய்தவனும், அடியேனை ஆண்டுகொண்டு - அடியேனையும் ஆட்கொண்டருளி, பத்திக்கடலுள் - பத்தியாகிய கடலில், பதித்த - அழுந்தச்செய்த, பரஞ்சோதி - மேலான ஒளி வடிவினனுமாகிய இறைவன், தித்திக்கும் ஆ பாடி - எமக்கு இனிக்கும் வகையைப் பாடி, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் கொட்டுவோம்.

விளக்கம் : முனிவர் குழாம் நனி வாட அவர்களுக்கு அருள் செய்யாது யானைக்கு அருள் செய்த பெருமானாதலின், அவ்வாறே எனக்கு அருள் செய்தான் என்றபடி, ‘அருளி’ என்பது, பெயர். இறைவன்பால் பத்தி செய்தலும் அவனே அருள வேண்டும் என்பார், ‘பத்திக் கடலில் பதித்த’ என்றார். சோதி, சுடும் இயல்பினது; அது பரஞ்சோதியாதலின், தண்ணென்று இன்பந்தருகிறது என்பார், ‘பரஞ்சோதி தித்திக்கும்’ என்றார்.

அத்திக்கு அருளியது : முன்னொரு காலத்தில் தேவி இறைவனோடு திருக்கயிலாயத்தில் தனித்திருக்கையில், சிவகணத்தின் தலைவனாகிய அத்தி என்பான், வாயில் காப்பாளர் தடுத்தும் உள்ளே சென்றான். தேவி சினங்கொண்டு ‘நீ அத்தியாக(யானையாக)ப் போகக் கடவை’ என்று சபித்தாள். சபிக்கவே, சாபமேற்ற அத்தி என்பான் தேவியையும் இறைவனையும் வணங்கிப் பொறுத்தருள வேண்டுமென்று வேண்டினான். தென்