கயிலாயமாகிய திருக்காளத்தியில் சென்று வணங்கினால் சாபம் நீங்குமென்று இறைவன் அருள் புரிந்தான். யானையாக மாறிய அத்தியும் அவ்வாறே காளத்தியை வணங்கிச் சாபம் நீங்கி முத்தி பெற்றான். இதனால், பத்தி செய்வதற்கும் இறைவன் அருள் வேண்டும் என்பது கூறப்பட்டது. 12 பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும் ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன் சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : பார்பாடும் - பூலோகத்தார் பக்கமும், பாதாளர் பாடும் - கீழுலகத்தார் பக்கமும், விண்ணோர்தம் பாடும் - மேலுலகத்தார் பக்கமும், ஆர் பாடும் - மற்று யாவர் பக்கமும், சாரா வகை அருளி - சென்றடையாத வண்ணம் அருள் செய்து, ஆண்டு கொண்ட - ஆண்டுகொண்டருளின, நேர் பாடல் பாடி - இறைவனது வெளிப்பாட்டினைப் பாடுவதாயுள்ள பாடலைப் பாடி, நினைப்பு அரிய - நினைத்தற்கரிய, தனிப் பெரியோன் - ஒப்பற்ற பெரியோனது, சீர் பாடல் பாடி - சீரினைப் புகழ்வதாயுள்ள பாடலைப் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ - நாம் தெள்ளேணம் கொட்டுவோம். விளக்கம் : மக்கட்கதி நரககதி தேவகதி என்னும் முக்கதியினும் சென்று பிறவாமல் அருளிச் செய்தான் என்பார், ‘பார்பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்தம் பாடும் ஆர் பாடுஞ் சேரா வகையருளி’ என்றார். சிவகதி அருளி ஆண்டுகொண்டான் என்பதாம். நேர்மையாவது, மறைவின்றி வெளிப்பட்டுத் தோன்றும் தன்மை. சீராவது, அடியார்களுக்கு அளவுபடாது வழங்கும் புகழ். இதனால், இறைவனைப் புகழ்வார் பரமுத்தி பெறுவர் என்பது கூறப்பட்டது. 13 மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன் பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தாற் சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : மாலே - திருமாலும், பிரமனே - பிரமனும், ஒழிந்த தேவர்களே - ஏனைத் தேவர்களும், நூலே - ஞான நூல்களும், நுழைவு அரியான் - புகுந்து அறிய முடியாதவன், நுண்ணியனாய் வந்து - நுட்பமாய் வந்து, அடியேன்பாலே புகுந்து - என்னிடம் போந்து, பரிந்து உருக்கும் பாவகத்தால் - இரங்கி என் மனத்தை உருக்கும் கருணை காரணமாக, சேல் - சேல் மீன் போன்ற, ஏர் - அழகைக் கொண்ட, கண் - கண்களில், நீர் மல்க
|