- நீர் பெருக, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் கொட்டுவோம். விளக்கம் : மாலே முதலியவற்றின் ஏகாரங்கள் எண்ணுப் பொருளன. மற்று, அசை. ‘பாவகத்தாற் சேலேர் கண் நீர்மல்க’ என்பது, இறைவன் காட்டிய பெருங்கருணையை நினைந்து கண்ணீர் பெருக்க வேண்டும் என்பதாம். பாவகம் - நினைவு; அஃது இறைவன் திருவுள்ளத்தைக் குறித்தது. இதனால், இறைவன் கருணையை நினைந்து உருக வேண்டும் என்பது கூறப்பட்டது. 14 உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியோம் திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : உருகி - மனமுருகி, பெருகி - உடல் பூரித்து, உளங்குளிர - நெஞ்சம் குளிர, முகந்துகொண்டு - மொண்டு கொண்டு, பருகற்கு இனிய - குடிப்பதற்கு இனிமையான, பரம் - மேலான, கருணை - கருணையாகிய நீரையுடைய, தடங்கடலை - பெரிய கடல் போன்றவனும், அடியோம் திருவை - அடியோங்களது செல்வமாக உள்ளவனும் ஆகிய இறைவனை, மருவி - பொருந்தி, திகழ் தென்னன் - விளங்குகின்ற தென்னவனாகிய அவனது, வார்கழலே நினைந்து - நீண்ட திருவடியினையே எண்ணி, பரவி - புகழ்ந்து, நாம் தெள்ளேணம் கொட்டாமோ - நாம் தெள்ளேணம் கொட்டுவோம். விளக்கம் : இறைவன் அளவற்ற கருணையை உடையவனாதலின், ‘பரங்கருணைத் தடங்கடலை’ என்றார். உருகுதல் பெருகுதல், குளிர்தல் முதலியன இறைவன் கருணையை நினைத்தலால் உண்டாவன. தென்னன் - சோமசுந்தர பாண்டியன். தென்பாண்டி நாட்டானாகிய பெருமான் அடியோங்களது செல்வமாகவும் இருக்கிறான் என்பார், ‘திகழ்தென்னன்’ என்றும், ‘அடியோம் திரு’ என்றும் கூறினார். இதனால், இறைவன் கருணைக்கடலாய் இருக்கிறான் என்பது கூறப்பட்டது. 15 புத்தன் புரந்தராதி அயன்மால் போற்றிசெயும் பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த அத்தன் அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ.
|