பதப்பொருள் : புத்தன் - புத்தனும், புரந்தராதி - இந்திராதி தேவர்களும், அயன் - பிரமனும், மால் - திருமாலும் ஆகியோர், போற்றி செயும் - துதிக்கும், பித்தன் - பித்தனும், பெருந்துறை மேய பிரான் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் பெருமானும், பிறப்பு அறுத்த அத்தன் - எமது பிறவித் தளையை அறுத்த அப்பனும் ஆகிய, அணி - அழகிய தில்லையம்பலவன் - தில்லை அம்பலவாணனது, அருட்கழல்கள் - திருவருளே வடிவமான திருவடிகள், சித்தம் புகுந்த ஆ - என் மனத்தே புகுந்த வழியினைப் பாடி, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் கொட்டுவோம். விளக்கம் : ‘போற்றி செய்தல்’ என்பது, போற்றப்படும் தன்மையாகிய தகுதியைக் குறித்தது. ஆகவே, சிவபெருமான் புத்தனாலும் போற்றப்படும் மேலான தகுதியை உடையவன் என்பது கருத்தாகலின், ‘புத்தன் போற்றி செயும் பித்தன்’ என்றமை பொருந்துமாறு அறிக. புத்தன் - புத்த சமய முதல்வன். தம்முடைய பிறப்பையறுத்து ஆட்கொண்டானாதலின், இறைவனை ‘அத்தன்’ என்றார். அருட்கழல்கள் சித்தம் புகுதலாவது, ஞானம் பெறுதலாம். இதனால், இறைவனது அருட்கூத்து ஞானத்தை நல்கும் என்பது கூறப்பட்டது. 16 உவவலச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாஞ் சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறுங் கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளுஞ் செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : உவலைச் சமயங்கள் - பொய்ச்சமயங்களும், ஒவ்வாத சாத்திரம் ஆம் - ஒன்றற்கொன்று பொருந்தாத சாத்திரங்களுமாகிய, சவலைக் கடல் உளனாய்க் கிடந்து - குழப்பமான கடலில் அகப்பட்டுக் கிடந்து, தடுமாறும் - தடுமாறுகின்ற, கவலை - துன்பத்தை, கெடுத்து - போக்கி, கழல் இணைகள் தந்தருளும் - திருவடிகள் இரண்டையும் கொடுத்தருள்கின்ற, செயலைப் பரவி - திருவருட்செயலைப் போற்றி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ - நாம் தெள்ளேணம் கொட்டுவோம். விளக்கம் : விரிவிலா அறிவினார்கள் ஆக்கினமையால், அச்சமயங்கள் பொய்ச்சமயங்களும், அவற்றின் சாத்திரங்கள் ஒவ்வாத சாத்திரங்களும் ஆயின. அவை மனக்குழப்பத்தையே உண்டு பண்ணுமாதலின், ‘சவலைக் கடல்’ எனப்பட்டன. கவலல் என்ற சொல் அல் விகுதி கெட்டு கவல் என நின்று ஐகார உருபேற்று, கவலை என வந்தது. கவலல் - கவலைப்படுதல்.
|