337


வேதாகமப் பிரசித்தம் என்பாள், ‘அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான்’ என்றாள். கண், அசை. சாழலோ என்பது, சாழல் விளையாட்டுப் பாடல் என்பதைக் குறிக்கும்.

இதனால், இறைவனது முழுமுதல் தன்மை கூறப்பட்டது.

1

என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தான்ஈசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ.

பதப்பொருள் : ஏடீ - தோழியே, என் அப்பன் - என் தந்தையும், எம்பிரான் - எமது பெருமானும், எல்லார்க்கும்தான் ஈசன் - எல்லார்க்கும் தானே தலைவனாய் இருப்பவனும் ஆகிய இறைவன், துன்னம் - தையல் பொருந்திய துணியை, பெய் கோவணம் ஆ கொள்ளுமது என் - சாத்தும் கோவணமாகக் கொள்வது ஏன்?

மறை நான்கே - வேதங்கள் நான்குமே, வான் சரடா. - பெரிய அரை நாணாகவும், மன்னு கலை - நிலைபெற்ற மெய்ந்நூலில், துன்னு பொருள் தன்னையே - நிறைந்துள்ள பொருள் தன்னையே, கோவணம் ஆ - கோவணமாகவும், சாத்தினன் - அணிந்திருக்கிறான்.

விளக்கம் : எதிர்ப்பக்கத்தவளது கருத்தினைத் தன் கருத்தாக ஏறிட்டுக் கொண்டு, ‘என்னப்பன் எம்பிரான்’ என்றாள் என்க.

துன்னத்தைக் கோவணமாகக் கொள்வது, சரடோடு நீங்காதவாறு இணைக்கப்பட்ட கோவணத்தை அணிவதாம். ‘கீளொடு கோவணம்’ என்பார் சேக்கிழார். ‘துன்னு பொருள்’ என்பதனோடு ‘தன்னையே’ என்பதைக் கூட்டிப் பொருள் கொள்ளப் பட்டது. சொல்லும் பொருளாய் அமைந்த வேதத்தையே கோவணமாக அணிந்திருக்கிறான் என்பதாம்.

இறைவன் அணிந்துள்ள கோவணம் ஏனையோர் அணிவன போல்வன அல்ல என்றும், அதனையும் தன்பொருட்டன்றி உயிர்கள் பொருட்டே அணிந்துள்ளான் என்றும் கூறியபடி. செல்வன் இறை என்றும், இறை பயப்பது என்றும் விடை இரு வகை. செவ்வன் இறையாவது, நேர் விடை; இறை பயப்பதாவது, விடையை அறிவிப்பது. அவற்றுள் இப்பாடலில் உள்ள விடை இறை பயப்பதாம்.

இதனால், இறைவன் மறையும் மறைப்பொருளுமாய் இருக்கிறான் என்பது கூறப்பட்டது.

2

கோயில்சு டுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ!
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங்
காயில்உ லகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.