338


பதப்பொருள் : ஏடி - தோழியே, கோயில் - உங்கள் இறைவனுக்குக் கோயிலாய் இருப்பது, சுடுகாடு - சுடுகாடாகும்; நல்ஆடை - நல்ல ஆடையாய் இருப்பது, கொல்புலித்தோல் - கொல்லுகின்ற புலியினது தோலாகும்; தாயும் இலி தந்தை இலி - தாயும் தந்தையும் இல்லாதவன், தான் தனியன் - தான் உறவினர் ஒருவரும் இல்லாது தனியனாய் இருக்கின்றான்; இது பெருமையாகுமோ?

தாயும் இலி தந்தை இலி - தாயும் தந்தையும் இல்லாதவனாய், தான் தனியன் ஆயிடினும் - தான் தனியனாய் இருந்த போதிலும், காயில் - அவன் கோபித்தால், உலகு அனைத்தும் - எல்லா உலகங்களும், கற்பொடி - கல்லின் பொடி போலத் தூளாகிவிடும்; (அதனால் அவனே உலகிற்குத் தலைவன் என்றாள்.)

விளக்கம் : ‘தாயுமிலி தந்தையுலி’ என்றது, தாய் தகப்பன் தெரியாத பிள்ளை என்ற இகழ்ச்சிப் பொருளிலாம். தாயும் தந்தையும் இன்மையின் சுற்றமும் இல்லையாதலின், ‘தான் தனியன்’ என்றாள். எனினும், எல்லாவற்றையும் ஒடுக்குபவன் சிவபெருமானாதலின், அவனே தலைவன் என்பாள், ‘காயில் உலகனைத்தும் கற்பொடிகாண்’ என்றாள்.

இதனால், இறைவன் எல்லாவற்றையும் ஒடுக்கும் ஆற்றலுடையவன் என்பது கூறப்பட்டது.

3

அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ!
நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ.

பதப்பொருள் : ஏடீ - தோழியே, அயனை - பிரமனையும், அனங்கனை - மன்மதனையும், அந்தகனை - கூற்றுவனையும், சந்திரனை - சந்திரனையும், வயனங்கள் - அவர்களது இகழ்ச்சியைக் காட்டும் சொற்கள், மாயா வடுச்செய்தான் - அழியாத அடையாளங்களை உண்டாக்கினான்; இது நல்லதாகுமோ?

தாழ் குழலாய் - தொங்கும் குழலை உடையவளே, நயனங்கள் மூன்று உடைய - கண்கள் மூன்றுடைய, நாயகனே - இறைவனே, தண்டித்தால் - ஒறுத்தலைச் செய்தால், வானவர்க்கு - அது தேவர்களுக்கு, சயம் அன்றோ - வெற்றியே அன்றோ!

விளக்கம் : வடுக்களாவன, அயன் தலை அரியப்பட்டமை, மன்மதன் உருவிலியாக்கப்பட்டமை, அந்தகன் உதைக்கப்பட்டமை, சந்திரன் காலால் தேய்க்கப்பட்டமை. ‘மாயா வடு’ என்றது, இகழ்ச்சி நீங்காமைக்குக் காரணமான வடு என்பதாம்.