339


நாயகன் தண்டித்தல் அழிப்பதற்கு அன்று; திருத்துவதற்கு ஆதலின், ‘நாயகனே தண்டித்தால் சயமன்றோ?’ என்றாள்.

அனங்கனை வடுச்செய்தது :

இறைவனது மோனத்தைக் கலைப்பதற்காகத் தேவர்கள் வேண்டு கோளின்படி, மன்மதன் மலர்க்கணையை இறைவன்மேல் விடுத்தான். இறைவன் மோன நிலை கலைந்து நெற்றிக்கண்ணைத் திறந்தான். அதனின்றும் வந்த தீயால் மன்மதன் சாம்பராயினான். அவனது மனைவி இரதியின் வேண்டுகோளுக்கிரங்கி மன்மதனை மீண்டும் எழுப்பியருளினான்; ஆனால், அவனது உடல் அவளுக்கு மட்டும் புலனாகவும் பிறர்க்குப் புலனாகாதிருக்கவும் அருளினான். அதனால் மன்மதனுக்கு அனங்கன் என்ற பெயர் உண்டாயிற்று. (கந்த புராணம்)

இதனால், இறைவனது ஒறுப்பும் நன்மையைத் தரும் என்பது கூறப்பட்டது.

4

தக்கனையும் எச்சனையுந் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ!
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன்காண் சாழலோ.

பதப்பொருள் : ஏடி - தோழயே, தக்கனையும் - யாகத்தை இயற்றிய தக்கனையும், எச்சனையும் - யாகத்தின் அதி தேவனையும், தலை அறுத்து - தலையை அறுத்து, தேவர் கணம் - தேவர் கூட்டம், தொக்கன வந்தவர் தம்மை - தொகுதிப்பட்டனவாகும்படி வந்தவர்களை, தொலைத்தது என் - முடித்தது என்ன காரணம்?

தொக்கன வந்தவர் தம்மை - கூட்டம் தொகுதிப்பட்டனவாகும்படி வந்தவர்களை, தொலைத்தருளி - அழித்தருளியதோடு, அருள் கொடுத்து - பின்னர் அவர்களுக்கு அருள் புரிந்து, அங்கு - அப்பொழுதே, எச்சனுக்கு - யாகத்தைச் செய்தவனாகிய தக்கனுக்கு, மிகைத்தலை அருளினன் - விரும்பப் பட்ட ஆட்டுத் தலையைக் கொடுத்தருளினான்.

விளக்கம் : ‘எச்சன்’ என்பது முதலில் யாகத்தின் அதி தேவதையையும், இரண்டாவது யாகத்தைச் செய்த தக்கனையும் குறித்தன. தக்கன் தலையை அறுத்ததும், பின்னர் ஆட்டுத்தலையை அருளியதும் திருவம்மானையில் கூறப்பட்டன.

எச்சன் தலை அறுபட்டது :

யாக சங்கார காலத்தில் யாகத்தின் அதிதேவன் மான் உருக்கொண்டு ஓட, வீரபத்திரர் ஒரு கணை தொடுத்து அவன் தலையை அறுத்தார் என்பதாம்.