‘மணனயர் சாலையின் மகத்தின் தெய்வதம் பிணையென வெருக்கொடு பெயர்ந்து போதலுங் குணமிகு வரிசிலை குனிந்து வீரனோர் கணைதொடுத் தவன்தலை களத்தில் வீட்டினான்’ (கந்தபுராணம் - யாகசங்காரப் படலம்) தக்கன் வேள்வியில் பின்னர் அனைவருக்கும் அருளியது : தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, இறைவன் வீரபத்திரர் மூலம் அருள் புரியவே, கரம், சிரம் முதலியன அறுபட்டு விழுந்து கிடந்தவர்களும், இறந்துபட்டோர்களும் தமது அவயவங்கள் வளரப்பெற்றும் உயிர் பெற்றும் எழுந்தனர் என்பது. ‘’தண்டம் இயற்றுந் தனிவீர னாற்சிதைந்த பிண்ட முழுதுருவும் பெற்றார் மகம்புக்கு விண்ட செயலுமுயிர் மீண்டதுவுங் கங்குலிடைக் கண்ட புதிய கனவுநிலை போலுணர்ந்தார்.’’ (கந்தபுராணம் - யாகசங்காரப் படலம்) இதனால், இறைவனது மறக்கருணை கூறப்பட்டது. 5 அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ! நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ. பதப்பொருள் : ஏடீ - தோழியே, அலரவனும் - பிரமனும், மாலவனும் - திருமாலும், அறியாமே - அறியாமல் திகைக்க, அழல் உருவாய் - நெருப்புருவாகி, (அவ்வுருவம்) நிலம் முதல் - பூவுலகம் முதல், கீழ் அண்டம் உற - பாதலம் அண்ட முகடு என்பவற்றைப் பொருந்த, நின்றது என் - நின்றதற்குக் காரணம் என்ன? நிலமுதல் கீழ் அண்டம் உற நின்றிலனேல் - இறைவன் அவ்வாறு நிற்கவில்லையெனில், இருவரும் - மேற்சொன்ன இருவரும், தம் சல முகத்தால் - தமது போர் முகதத்தால் வெளிப்பட்ட, ஆங்காரம் தவிரார் - செருக்கினை விடமாட்டார். விளக்கம் : சலம் - கோபம்; அது, கோபங்காரணமாகச் செய்த போரினைக் குறித்தது. ‘வெளிப்பட்ட’ என்னும் சொல்லை வருவித்துக் கொள்க. இறைவன் அழல் திருமேனி கொண்டு அண்டமுற நின்றது, பிரமன் திருமால் இவர்களது செருக்கினையும், அதனால் உலகத்திற்கு உண்டாகிய துன்பத்தையும் போக்கி, அனைவர்க்கும் நலம் விளைத்தற்பொருட்டே எனக் கூறினார் என்க. இதனால், இறைவன் உயிர்களின் செருக்கினைப் போக்குபவன் என்பது கூறப்பட்டது. 6
|