மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னோடீ சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ. பதப்பொருள் : ஏடீ - தோழியே, மலைமகளை - பார்வதி தேவியை, ஒரு பாகம் வைத்தலும் - ஒரு பங்கில் இருத்தியதன்றியும், மற்றொருத்தி - இன்னொருத்தி, சலமுகத்தால் - நீர் வடிவமாக, அவன் சடையில் - அவனது சடையின்கண், பாயுமது என் - பாய்வதற்குக் காரணம் யாது? சலமுகத்தால் - நீர் வடிவமாக, அவன் சடையில் பாய்ந்திலளேல் - அவன் சடையின்கண் அவள் பாய்ந்திராவிட்டால், தரணி எல்லாம் - உலகமெல்லாம், பிலமுகத்தே புகப் பாய்ந்து - பாதாளத்திலே அழுந்திவிட, பெருங்கேடு ஆம் - பெருங்கெடுதி உண்டாகிவிடும். விளக்கம் : ‘வைத்தல்’ என்பதற்குப் பின் ‘அன்றி’ என்பது வருவிக்கப்படும். இறைவன் ஒரு மனைவியை மணந்ததேயன்றி இரண்டாம் மனைவியாக மற்றொருத்தியையும் மணந்தது பொருந்துமோ என்று வினவினாள். அதற்குப் பகீரதன் வேண்டுகோளுக்காக வேகமாகப் பாய்ந்து வரும் கங்கையை இறைவன் தன் சடையில் ஏற்றிராவிடில் பூவுலகம் அழிந்திருக்கும்; ஆகவே, விருப்பங்காரணமாக மணந்திலன்; உலகத்தைக் காக்கவே அவளைத் தாங்கினான் என விடை கூறினாள். இதனால், இறைவன் உலகத்தைக் காத்தல் கூறப்பட்டது. 7 கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னோடீ ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. பதப்பொருள் : ஏடீ - தோழியே, அன்று - அக்காலத்தில், கோலாலமாகிக் குரைகடல்வாய் - ஆரவாரமாய் ஒலிக்கின்ற கடலினிடத்தில், எழுந்த - உண்டாகிய, ஆலாலம் உண்டான் - ஆலகால விடத்தை உண்டான், அவன் சதுர் என் - அவனுக்குப் பெருமை என்ன உண்டு? ஆலாலம் உண்டிலனேல் - ஆலகாலவிடத்தை உண்டிராவிட்டால், அயன்மால் உள்ளிட்ட - பிரமன் திருமால் உட்பட்ட, மேலாய தேவர் எல்லாம் - மேன்மையுடைய தேவர்கள் எல்லோரும், வீடுவர் - மடிவார்கள். விளக்கம் : கோலாகலம் என்பது, கோலாலம் எனவும், ஆலகாலம் என்பது, ஆலாலம் எனவும் திரிந்தன. உலகத்தில் தாம்
|