சாவ நஞ்சுண்பார் இல்லை; ஆகவே, நஞ்சை உண்ணல் பித்துச் செயலாதலின், ‘அவன் சதுர்தான் என்?’ என்றாள். அதற்கு அது பித்துச் செயலன்று; தேவரைக் காக்கும் பொருட்டுச் செய்த அருட்செயலேயாம் என்று விடை கூறினாள். இதனால், இறைவனது கருணைத்திறங் கூறப்பட்டது. 8 தென்பால் உகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ. பதப்பொருள் : ஏடீ - தோழியே, தென்பால் - தென்திசையை, உகந்து ஆடும் - நோக்கி ஆடுகின்ற, தில்லைச் சிற்றம்பலவன் - தில்லைச் சிற்றம்பலத்தையுடையான், பெண்பால் உகந்தான் - பெண்ணின் பாகத்தை விரும்பினான், பெரும்பித்தன் - ஆதலின், அவன் பெரிய பித்துக்கொண்ட வனாவான். பேதாய் - அறிவிலியே, பெண்பால் உகந்திலனேல் - அவன் பெண்ணின் பகுதியை விரும்பாவிடில், இருநிலத்தோர் - பெரிய நிலவுலகத்தார் யாவரும், விண்பால் யோகு எய்தி - வீடடைவதற்குரிய யோகம் ஒன்றிலேயே நின்று, வீடுவர் - அதனை முற்றுவிக்க மாட்டாமல் அழிவர். விளக்கம் : நடராஜப்பெருமான் தென்திசையை நோக்கி ஆடுகின்றானாதலின், ‘தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்’ என்றாள். இயல்பாக ஆணவ மலத்தையுடைய உயிர்கள் முதற்கண் உலக இன்பத்தைத் துய்த்து, அம்மலம் பரிபாகம் உற்ற பின்பே வீட்டின்பத்தை அடைதற்கு உரியன; ஆதலின், உலக இன்பத்தைத் துய்க்கும் நிலையில் உள்ளவர்கட்கு அவ்வின்பம் அமைதற் பொருட்டே போக வடிவத்தையும் இறைவன் கொண்டு நிற்கின்றான். அங்ஙனம் கொள்ளவில்லை என்றால், யோக நிலைக்கு உரியர் அல்லாதவரும் யோக நிலையை மேற்கொண்டு பயன்பெற மாட்டாது அழிவர் என்பதாம். இதனால், இறைவன் போகியாய் இருந்து போகத்தைத் தருகிறான் என்பது கூறப்பட்டது. 9 தான்அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ.
|