பதப்பொருள் : ஏடீ - தோழியே, தான் அந்தம் இல்லான் - தான் முடிவில்லாத பெரியோன் என்று உன்னால் சொல்லப்பட்டவன், தனை அடைந்த நாயேனை - தன்னை விரும்பியடைந்த நாய் போன்ற என்னை, ஆனந்த வெள்ளத்து - இன்பக் கடலில், அழுத்துவித்தான் - திளைக்கச் செய்தான்; இதனை அறிந்துகொள். ஆனந்த வெள்ளத்து - இன்பக் கடலில், அழுத்துவித்த திருவடிகள் - உன்னைத் திறைக்கச் செய்த திருவடிகள், வான் உந்து தேவர்க்கு - விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர்களுக்கு, ஓர் வான் பொருள் - ஒப்பற்ற கிடைத்தற்கரிய பெரும்பொருளாகும். விளக்கம் : கீழ்ப்பட்டவளாகிய என்னை இன்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்தவன் பெரியோனாவனோ என்று வினாவினாள். அதற்குத் தனது இன்ப வேட்கையாலன்றி உன் அன்பு நோக்கிய கருணையினால் அவ்வாறு செய்தான்; ஆயினும், மேலான தேவர்க்கும் மேலானவன் அவன் என்று விடை கூறினாள். ‘கனவிலும் தேவர்க்கரியாய் போற்றி, நனவிலும் நாயேற்கருளினை போற்றி’ என்றதையுங் காண்க. இதனால், இறைவன் அடியாரைப் பேரின்ப வெள்ளத்துள் ஆழ்த்துகின்றான் என்பது கூறப்பட்டது. 10 நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. பதப்பொருள் : ஏடீ நங்காய் - ஏ தோழி, நரம்போடு - நரம்பையும், எலும்பு அணிந்து - எலும்புகளையும் அணிந்து, கங்காளம் - எலும்புக் கூட்டை, தோள்மேலே காதலித்தான் - தோள்மேல் தாங்க விரும்பினான், இது என்ன தவம் - இதென்ன தவவேடம்? கங்காளம் ஆம் ஆ கேள் - எலும்புக்கூடு வந்த விதத்தைக் கேட்பாயாக, காலாந்தரத்து - பேரூழிக் காலத்தில், இருவர் தம் காலம் செய்ய - பிரம விட்டுணுக்களாகிய இருவரது காலம் முடிந்து அவர்கள் மறைந்தமையை அறிவிக்க, தரித்தனன் - அணிந்தான். விளக்கம் : நரம்போடு எலும்பு அணிதல் தவக்கோலம் அன்று ஆதலின், ‘இதென்ன தவம்’ என்றாள். ‘உயிர்க்கு உறுகண் செய்யாமை’ தவமாம் என்பதாம். உலகமெல்லாம் ஒடுங்கும் ஊழிக்காலத்தில் சிருட்டி திதி கர்த்தர்களாகிய பிரம விட்டுணுக்களும் ஒடுங்குவார் என்பதை அறிவித்தற் பொருட்டு அவர்களது முதுகு எலும்பினைத் தோள்மேல் தாங்குகின்றான் என்பது, ‘காலாந்தரத் திருவர்தம் காலம் செய்யத் தரித்தனன்’ என்பதனால் கூறப்பட்டது.
|