விளக்கம் : உலகறியத் தீ வேட்டது தன்பொருட்டன்று; உயிர்கள் பொருட்டேயாம். போகியாயிருந்து போகத்தைக் கொடுத்து யோகியாயிருந்து யோகத்தை அருளுவது போல, இல்லறத்திலிருந்து இல்லறத்தை நடைபெறச் செய்து துறவறத்திலிருந்து துறவறத்தை நடைபெறச் செய்வான் என்றபடி. உலகில் உள்ள உயிர்கள் என்றது மக்களுயிரையே குறிக்கும். கலை நவின்ற பொருள்களாவன, இல்லறம் முதலியன. ‘கலங்கிடும்’ என்றதனால், மக்கள் அவற்றை நன்குணரமாட்டார்கள் என்பதாம். ‘உலகனைத்தும் கலங்கிடும்’ என்று கூட்டிப் பொருள் கொள்ளப்பட்டது. இதனால், இறைவன் அறம் முதலியவற்றைச் சொல்லிக் காட்டுதலே யன்றிச் செய்தும் காட்டுகிறான் என்பது கூறப்பட்டது. 13 தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. பதப்பொருள் : ஏடீ - தோழியே, தேன் புக்க - தேன் பாய்கின்ற, தண்பணை சூழ் - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, தில்லை - தில்லையின் கண்ணுள்ள, சிற்றம்பலவன் - திருச்சிற்றம்பலமுடையான், தான்புக்கு - தான் திருவாலங்காட்டுக்குச் சென்று, நட்டம் பயிலுமது - திருநடனம் பண்ணியது, என் - யாது காரணம்? தான் புக்கு - தான் அங்குச் சென்று, நட்டம் பயின்றிலனேல் - திருநடனம் செய்யவில்லையெனில், தரணி எல்லாம் - உலகமெல்லாம், ஊன் புக்க - மாமிசம் பொருந்திய, வேல் - வேலாயுதத்தைத் தாங்கிய, காளிக்கு - காளிக்கு, ஊட்டு ஆம் - உணவு ஆகிவிட்டிருக்கும். விளக்கம் : நடம் என்பது நட்டம் என விரிந்தது. இறைவன் நடனம் செய்தது பொருள் கருதியோ புகழ் கருதியோ அன்று; உலகம் உய்யும் பொருட்டு என்றதாம். தில்லைச் சிற்றம்பலவன் தான் புக்கு நட்டம் பயின்றது : காளிதேவி இரத்தபீசன் என்னும் அசுரனைக் கொன்று அவனது இரத்தத்தைக் குடித்தமையாலுண்டான வெறியால் உலகத்தை நாசஞ்செய்யக் கருதியகாலை, இறைவன் ஊர்த்துவ தாண்டவம் இயற்றி அவள் செருக்கை அடக்கியருளினான். இது நடைபெற்ற இடம் திருவாலங்காடு. காளி அசுரன் இரத்தத்தைக் குடித்தது, அவன் இரத்தம் கீழே சிந்தினால் அதனின்றும்
|