சொல்லப்பட்ட கருத்துகளையே அறமாக உபதேசம் செய்தானாயினும், புரம் மூன்றும் - முன்பு தன்னை வழிபட்டிருந்து பின்பு மறந்தவர்களது முப்புரங்களையும், கூட்டோடே கொன்றான் - முற்றிலும் எரித்து அழித்தனன். விளக்கம் : பல தேவர்களையும் வழிபடும் முறையினைக் கூறும் வேதத்துள் சொல்லப்பட்ட பொருளையே அறமாக நான்கு முனிவர்கட்குக் கூறினமையால், சிவபெருமான் ஒருவனே முதல்வனாதல் எவ்வாறு என்னும் வினாவும், வேதத்தின் பொருள் பல தேவரைக் கூறுவதாய் இருப்பினும் சிவபெருமானே முதல்வன் என்பதே கருத்தாதல் திரிபுரத்தவர் வரலாற்றால் விளங்கும் என்னும் விடையும் இத்திருப்பாடலில் குறிப்பால் விளங்கும் என்க. அங்கு, அசை. நால்வருக்கு அறமுரைத்தலாவது : சனகாதியர் நால்வரும் நன்றாக வேதங்களை ஓதியிருந்தும் அவற்றின் உட்பொருளை உணராமையால் மனம் அமைதி பெறாது தவித்தனர். இறைவன் தட்சிணாமூர்த்தியாய்ச் சின்முத்திரையினாலே அவர்களுக்கு உண்மைப்பெருளை விளக்கி ஞானத்தை நல்கினான் என்ற வரலாறே கந்தபுராணத்தில் காணப்படுகின்றது. திருமுறைகளில் இவ்வரலாறு சிறிது வேறுபடக் குறிக்கப்படுகின்றது. இதனால், சிவபெருமானது சிறப்புக் கூறப்பட்டது. 16 அம்பலத்தே கூத்தாடி அமதுசெயப பலிதிரியும் நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. பதப்பொருள் : ஏடீ - தோழியே, அம்பலத்தே கூத்தாடி - பொது இடத்தில் கூத்தாடி, அமுது செய - உண்பதற்கு, பலி திரியும் - பிச்சை யேற்றுத் திரிகின்ற, நம்பனையும் - சிவனையும், தேவன் என்று - கடவுள் என்று, நண்ணுமது என் - அடைவது என்? ஆம் ஆ கேள் - சிவபெருமான் கடவுளாகின்ற விதத்தைக் கேட்பாய், நான்மறைகள் - நான்கு வேதங்கள், நம்பனையும் அறியா - சிவபெரு மானையும் மற்றைத் தேவர்கள் போல அறியாதனவாகி, எம்பெருமான் - எம்பெருமானே, ஈசா - ஈசனே, என்று ஏத்தின - என்று புகழ்ந்தன. விளக்கம் : பொதுவிலே ஆடி, ஓட்டிலே பலியேற்று ஊரெல்லாம் திரிந்தாலும் வேதங்களும் அவனை அறிய முடியாது ஏங்கின என்பாள், ‘எம்பெருமான் ஈசாவென் றேத்தின’ என்றாள்.
|