இதனால், அடியார் திருவடித்தொண்டின் சிறப்புக்கூறப்பட்டது. 8 பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர் என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க் கன்னா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள் பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. பதப்பொருள்: பன்னாள் பரவி - யான் அநேக நாள வாழ்த்தி, பணி செய்ய - தொண்டு புரிய, பாதமலர் - திருவடி மலரை, என் ஆகம் - என் மனத்தில், எழிய சுடராய் - அழகிய சோதியாய், துன்ன வைத்த - பொருந்த வைத்த, பெரியோன் - பெருமையுடையவன், கல் நார் உரித்து - கல்லில் நார் உரித்தாற்போல என் நொஞ்சை அன்புடையதாக்கி, என்னை ஆண்டுகொண்டான் - என்னை ஆட்கொண்டருளினான், கழல் இணைகள் - அவனது இரண்டு திருவடிகளும், பொன் ஆன ஆபாடி - சிறந்த செல்வமாய் இருக்கின்ற நிலையைப் பாடி, பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம். விளக்கம்: இறைவன் அடியாரைப் பாடுவிப்பதில் பெரு விருப்புடையனாதலின், 'பன்னாட் பரவிப் பணிசெய்ய' என்றார். நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை' என்றார் முன்னரும். இறைவன் உள்ளத்திலே சோதியாய்த் தோன்றுவான் என்பார், 'எழிற்சுடராய் என் ஆகம் துன்ன வைத்த' என்றார். 'என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே' என்ற அடிகள் வாக்கையும் காண்க. இதனால், இறைவனது திருவடிப் பெருமை கூறப்பட்டது. 9 பேராசை யாம்இந்தப் பிண்டமறப் பெருந்துறையான் சீரார் திருவடி யென்றலைமேல் வைத்தபிரான் காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. பதப்பொருள்: பேராசை ஆம் - பேராசைக்கு இடமாகிய, அந்தப் பிண்டம் அற - இவ்வுடம்பு நீங்கும் வண்ணம், பெருந்துறையான் - திருப்பெருந்துறையையுடையவனும். சீர் ஆர் திருவடி - சிறப்பு அமைந்த திருவடியை, என் தலைமேல் வைத்த பிரான் - என் சிரமீது வைத்த பெருமானும், கார் ஆர் - பெருமை நிறைந்த, கடல் நஞ்சை - கடலில் தோன்றிய விடத்தை, உண்டு உகந்த - உண்டு களித்த, காபாலி - காபாலம் என்னும் கூத்தையுடையவனுமாகிய இறைவனது, புரம் - முப்புரத்திலே, போர் ஆர் பாடி - போர் செய்த நிலையைப் பாடி, பூவல்லி கொய்யாமோ - பூவைப் கொடியினின்று கொய்வோம். விளக்கம் : 'பேராசையாம் இந்தப் பிண்டம்' என்றதற்குப் பேராசையால் உண்டாகிய இந்த உடம்பு என்றும் பொருள்
|